Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்கு செயல்முறை வெளியிட கோரிக்கை

 


DRPGTA 21.12.23


அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்


அல்லது


அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடக்கும் என்பதை செயல்முறைகளாக வெளியிட வேண்டும்


முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை


நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

பதிவு எண் 239/2017



அனுப்புநர்:-

ஆ.இராமு,

மாநிலத் தலைவர்,

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,

DRPGTA,

7373761517.


பெறுநர்:-

        மாண்புமிகு

 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,

தலைமை செயலகம்,

சென்னை -09.


ஐயா,

          பொருள்:-

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்


அல்லது 


அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடக்கும் என்பதை செயல்முறைகளாக வெளியிட வேண்டும்.


 2023- 2024 கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் தமிழக முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

தொடர்ச்சியாக தற்போது நடைபெற்று வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மிக சிறப்பாக இயங்கி வருகின்றன.


இந்த நிலையில் நாளை 22 12 2023 அரையாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் நிறைவு பெற உள்ளன.


நாளை மறுநாள் 

23.12 .2023 முதல்

 01.02.2024 வரை பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை என செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் கட்டாயம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்து உள்ளனர்.


தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள துறைகளில் பணிபுரியும் பிற பணியாளர்களை விட பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி முற்றிலும் வேறுபட்டது மாறுபட்டது.


தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளைச் சந்தித்து அவர்களுக்கு கற்றல் கற்பித்தலைச் செய்து ,

அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களை தம்மால் இயன்ற அளவு சீர் செய்ய முயற்சிகள் எடுத்து,

 பள்ளியை ஒற்றுமையுடன் நடத்தி,எமிஸ் சார்ந்த தகவல்களை இரவு பகலாக உள்ளீடு செய்து கொண்டு தங்கள் பணியைச் செய்து வருகிறார்கள்.


மேலும் நடைபெற்று வரும் அரையாண்டுத் தேர்வுக்கு அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்துள்ளனர்.


மேலும் கடந்த மாதம் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் கலைத் திருவிழாவை ஆசிரியர்கள் திறம்பட நடத்தினார்கள்.


தொடர்ந்து 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளின் பொதுத் தேர்வு சார்ந்த விவரங்களை எமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்


தொடர்ந்து எமிஸில் அப்டேட் செய்த அந்த மாணவர்கள் விவரங்களை தற்போது உறுதிமொழி படிவம் மூலம் பதிவிறக்கம் செய்து அதனை தற்போது ஒவ்வொரு மாணவரிடமும் கொடுத்து அதில் உள்ள விவரங்களை சரிபார்க்க சொல்லி பெற்றோர்கள் கையொப்பங்களையும் பெற்று அதனை இறுதி செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

இது சார்ந்த விவரங்களை எமிஸில் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 31.12.23 என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இது ஒரு புறம் இருக்க வரும் 

26. 12 .2023 முதல் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கும் நீட் ஜேஇஇ பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டிய தேதி நேரம் கால அட்டவணையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளியிடப்பட்டு வருகிறது.


அதே நேரம் நாளை அரையாண்டு தேர்வு முடிய உள்ள நிலையில் அரையாண்டு தேர்வு விடைத்தாள்களையும் ஒவ்வொரு ஆசிரியரும் மதிப்பீடு செய்து அதை உடனடியாக நான்கு அல்லது ஐந்து நாட்களில் தலைமை ஆசிரியரிடம் கொடுத்து ஒப்படைக்க வேண்டும் என்ற தகவலும் கிடைத்து வருகிறது.


அதே நேரத்தில் அரையாண்டு தேர்வுகள் காலை மாலை என ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.


நாளை தேர்வு முடிந்த பிறகு தான் அரையாண்டு தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.


இந்த நிலையில் நீட்,ஜேஇஇ தேர்வு சார்ந்த பயிற்சி வகுப்பிற்கும் ஆசிரியர்கள் செல்ல வேண்டும்.

தொடர்ந்து

பள்ளிகளில் பாடம் சார்ந்த சிறப்பு வகுப்புகளுக்கும் ஆசிரியர்கள் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர்கள் எப்போது மதிப்பீடு செய்ய முடியும்?


மேலும் கடந்த மே மாதம் +1,+2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிந்தும் முதுகலை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்காமல் நான் முதல்வன் பள்ளி அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையத்திற்கு பள்ளிகளுக்கு வருகை புரிந்தார்கள். அதற்கு மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களும் ஆறு நாட்கள் ஈடு செய்யும் விடுப்பு கொடுத்திருக்கிறார்கள்.

 எனவே தொடர்ந்து விடுமுறை இல்லாமல் கற்றல் கற்பித்தல் பணிகள் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் வைப்பதை இரத்து செய்திட வேண்டும்


மேலும் ஆசிரியர் பணியைப் பொருத்த வரை காலாண்டு தேர்வு விடுமுறை, அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பது உளவியல் சார்ந்த விடுமுறை ஆகும்.


தொடர்ந்து கற்றல் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு மன ரீதியாக ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்பது காலங்காலமாக உளவியல் வல்லுநர்களின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டு வரும் ஒரு நடைமுறையாகும்.


அதனை மறுத்து அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்,

தொடர்ந்து நீட் ,ஜேஇஇ தேர்வு சார்ந்த பயிற்சி வகுப்புகள் என ஒன்றுக்கு பல வேலைகளை அளிக்கப்பட்டு வருகிறது‌.


இதனால் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் ஒரு வார காலம் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதோஅல்லது குடும்பத்துடன் நேரம் செலவிடுவது இயலாத காரியமாக உள்ளது.

மேலும் ஆசிரியர்களுக்கு மன ரீதியான ஓய்வு என்பது சிறிதளவு கூட இல்லாமல் கடும் மனச்சோர்வை அளித்து வருகிறது என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்


எனவே ஆசிரியர்களுக்கு மனரீதியாக ஓய்வு அளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அரையாண்டுத்தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்திட வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவை உடனடியாக கைவிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


அதே நேரம் ஒரு சில மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும் என முதன்மைக்கல்வி அலுவலரிடம் தெரிவித்து அதன் அடிப்படையிலும் சிறப்பு வகுப்புகளுக்கான செயல்முறைகள் முதன்மைக்கல்வி அலுவலரால் வெளியிடப் பட்டுள்ளன.


ஒரு சில மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு மூலம் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்று அறிவிப்பு செய்து உள்ள நிலையில் தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களிடம் சிறப்பு வகுப்புகள் பள்ளிகளில் நடத்திட புதிய கால அட்டவணையும் தயார் செய்து அதனை ஆசிரியர்களிடம் கொடுத்து கையொப்பம் பெற்று வருகின்றனர்.


மேலும் அரையாண்டுத்தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் போது தற்போதைய சூழலில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலோ,

 அல்லது பள்ளிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தாலோ,

 அதற்கு ஆசிரியரே பொறுப்பேற்று தண்டனை அனுபவிக்க கூடிய சூழலும் உள்ளது.

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அற்ற சூழலும் தற்போது உள்ளது.


எனவே ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள பல்வேறு கடினமான சூழல்களுக்கு மத்தியிலும் பள்ளிக்கல்வித்துறை உறுதியாக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று விரும்புமேயானால் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் வைப்பதற்கான நாள், கிழமை, நேரம், எந்தெந்த பாட ஆசிரியர்கள் எந்தெந்த தேதியில் பள்ளிக்கு வருகை தர வேண்டும் போன்ற அனைத்தையும் செயல்முறைகளாக எழுத்து வடிவில் வெளியிட்டால் அது ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு தரக்கூடிய விதமாக அமையும்.


எனவே அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்பது சார்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்


இப்படிக்கு 

ஆ.இராமு, 

மாநிலத் தலைவர்,

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ,

DRPGTA ,

7373761517.


சென்னை

21.12.23


நகல்:-


மதிப்பிற்கும் மரியாதைக்கு உரிய

ஜெ.குமரகுருபரன் இஆப அவர்கள், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்,

தலைமைச் செயலகம்,

சென்னை 9.


மதிப்புமிகு 

முனைவர். க அறிவொளி அவர்கள்,

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள்,

பள்ளிக்கல்வி இயக்ககம், 

சென்னை 6.

அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்கு செயல்முறை வெளியிட கோரிக்கை அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்கு செயல்முறை வெளியிட கோரிக்கை Reviewed by Rajarajan on 22.12.23 Rating: 5

கருத்துகள் இல்லை