தலைமை ஆசிரியர் இல்லாத 3,343 அரசுப் பள்ளிகள்! - தவிக்கும் மாணவர்கள்
தலைமை ஆசிரியர் இல்லாத 3, 343 அரசுப் பள்ளிகள்!
ஆண்டுதோறும் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, மரணங்கள் காரணமாக தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாகவே செய்யும். பெரும்பாலும் அவசியம் கருதி அவை உடனுக்குடன் நிரப்பப்பட்டு விடும்.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் இதுவரை இல்லாத அளவுக்குக் கடும் நெருக்கடியைச் சந்திக்கும் நேரம் இது. 670 மேல்நிலைப்பள்ளிகள்,
435 உயர்நிலைப்பள்ளிகள்,
1,003 நடுநிலைப்பள்ளிகள்,
1,235 தொடக்கப்பள்ளிகள் என்று ஒட்டுமொத்தமாக 3,343 அரசுப்பள்ளிகள் இப்போது தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
பள்ளியின் ஒட்டுமொத்த நிர்வாகி என்பவர் தலைமை ஆசிரியர்தான். ஆசிரியர்களுக்குப் பணியைப் பிரித்துத் தருவது, எல்லோரையும் கண்காணித்து வழிநடத்துவது, பெற்றோரையும் பள்ளியையும் ஒருங்கிணைப்பது எனத் தலைமை ஆசிரியர்களுக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கின்றன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில், வட்டாரக் கல்வி அலுவலகத்துக்குப் போய் இவற்றை எடுத்துவரும் வேலையையும்கூட தலைமை ஆசிரியர்களே செய்வார்கள். அதேபோல மாணவர்களுக்கு பல திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கு விண்ணப்பிப்பது, மாணவர்களைப் பங்கேற்க வைப்பதெல்லாம் தலைமை ஆசிரியர்கள்தாம். எமிஸ் (Educational Management Information System) தளத்தில் ஒட்டுமொத்தப் பள்ளிச் செயல்பாட்டையும் அன்றாடம் பதிவு செய்ய வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இப்பணிகளுக்குத் தனி ஊழியர்கள் இருப்பார்கள். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இந்தப் பணியையும் செய்யவேண்டும்.தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் அங்கே பணியாற்றும் மூத்த ஆசிரியர் ஒருவரைப் பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமிப்பார்கள். ஆனாலும் அவருக்குத் தலைமை ஆசிரியருக்குரிய அதிகாரம் இல்லை. இதனால் பள்ளிகள் பல வாய்ப்புகளை இழக்கின்றன. நிர்வாக ரீதியில் பல பிரச்னைகள் எழுகின்றன. அதன் விளைவுகளை அங்கே படிக்கும் மாணவர்களே எதிர்கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை