Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

BRTE பூச்சிய கலந்தாய்வு : அரசு சாதித்தது என்ன?

 


*BRTE கலந்தாய்வு : அரசு சாதித்தது என்ன?*


சரியான, தெளிவான கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை..


எந்த இடம் காட்டப்படும், எந்த இடங்கள் மறைக்கப்படும் என்கிற விபரங்கள் கடைசி வரையிலும் தெரியவில்லை..


முன்னுரிமை பட்டியல் வெளியிடப் பட்டு ஆசிரியர் பயிற்றுநர் அனைவரிடமும் திருத்தம் ஏதுமில்லை என்று கடிதம் பெற்று முன்னுரிமை பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில் தான் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வின் போதே சிலரது தரவரிசையில் மாற்றம் செய்யப்பட்ட வினோதமும் நடந்தது...!


ஏற்கனவே இருந்த பணியிடங்கள் மட்டுமின்றி புதிதாக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.. அந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதுவரையில் சரி. ஆனால் கலந்தாய்வு நடக்கும் போதே பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது எந்த வகையில் சரியானது என்று தெரியவில்லை..


மேலும் அனைத்து வட்டார வள மையங்களிலும் ஒரே விதமான பயிற்சி, பணிகள் தான் நடைபெறுகின்றன. ஆனாலும் ஒவ்வொரு மையத்திற்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை.. ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கை.. எந்த அடிப்படையில் பாடவாரியாக ஆசிரியர் பயிற்றுநர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.. ஒரு பொதுவான வழிகாட்டுதல் இருக்க வேண்டுமா இல்லையா.. ஒத்தையா ரெட்டையா போடுவது எப்படி சரியாக இருக்க முடியும்.. 




Spouse முன்னுரிமை என்பது அவரவர் பணிபுரியும் மாவட்டத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் அந்த காரணத்தினால் முன்னுரிமை பெற்றவர்கள் அடுத்த மாவட்டங்களில் உள்ள இடங்களை தேர்வு செய்தது அந்தந்த மாவட்டத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவர்களின் வாய்ப்பை பறிப்பதாக அமைந்து விட்டது..


மாவட்டங்களுக்குள் நடந்த பணி நிரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சொந்த மாவட்டத்திற்கு மீண்டும் வருவதற்காக deployment முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த கலந்தாய்வு அந்த நோக்கத்தையும் நிறைவு செய்யவில்லை..


மாநில அளவிலான பூஜ்ய கலந்தாய்வு என்று அறிவித்த பிறகு முன்னுரிமை அளித்தது எப்படி சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.


அந்த முன்னுரிமை பட்டியலும் கூட எந்த ஆண்டில் பணியேற்றார் என்பதை கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக வைத்து முன்னுரிமை பட்டியல் என்பது என்ன வித அறிவுப்பூர்வமான அணுகுமுறை என்றும் தெரியவில்லை. 2002, 2005, 2010, 2014 என்று எல்லோரையும் ஒரே பட்டியலில் வைத்து அதில் முன்னுரிமை என்றால் 5 வருடம், 10 வருடம், 15 வருடம் என பணியாற்றிவரும் அரசு ஊழியரின் பணி மூப்புக்கு என்ன மரியாதை, என்ன அர்த்தம் உள்ளது என்று தெரியவில்லை. 2007ல் பணி ஏற்றவர் சொந்த மாவட்டத்தில் தன்னுடைய பணி இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அவரை விட பணியில் இளையோர் அவருடைய வாய்ப்பை பறிக்க முடிகிறது என்றால் இது என்ன வகையான அணுகுமுறை..?


Convertion மற்றும் பணி ஓய்வு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் தற்போது கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்கள் ஆகியவற்றை நிரப்புவதன் மூலமே மாவட்டத்தில் இருந்து வெளியில் சென்றவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கி இருக்க முடியும். அதைச் செய்யவில்லை. இந்த கலந்தாய்வு அந்த நோக்கத்தையும் நிறைவு செய்யவில்லை..


மீதி உள்ள இடங்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே கலந்தாய்வு வெற்றிகரமாக நடத்தி இருக்க முடியும். அதை செய்யவில்லை.


பணியில் மூத்தோர் பாதிக்கப் பட்டுள்ளனர். சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்தோர் பல்வேறு மாவட்டங்களுக்கு பந்தாடப் பட்டுள்ளனர்.


சில நூறு பேருக்கு வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாய்வு சில ஆயிரம் பேரை கடும் மன உளைச்சலுக்கும் பரிதவிப்பிற்கும் ஆளாக்கி உள்ளது. குடும்பங்கள், குழந்தைகள், கணவன்/மனைவி என பலரையும் நிம்மதியற்ற நிலைக்கு தள்ளி உள்ளது.


காலை எட்டு ஒன்பது மணிக்கெல்லாம் தனக்கான பணியிடத்தை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் ஒரு ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு செய்து விட்டு எதற்கு காத்திருக்கிறோம் என்று தெரியாமலேயே பத்து, பனிரெண்டு மணி நேரம் காத்திருந்த கொடுமைகள் ஒருபுறம்..


காத்திருந்து, பொறுமை இழந்து அதிகாரிகளிடம் கேட்டு அவர்களின் ஒப்புதல் பெற்று இரவு வீடு வந்து சேர மீண்டும் ஒரு தகவல் வருகிறது. உடனே வந்து ஆர்டர் வாங்கி புதிய பணியிடத்தில் சேர வேண்டும்.. ஆசிரியர் பயிற்றுனர்கள் அயராது பணியாற்றுவதால் அதிகாரிகள் இவர்களை ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போன்றே நினைக்கின்றனர் போலும். ஒரு சுற்று சுற்றியதும் DPO வந்து விடுவார்கள். இன்னொரு சுற்று சுற்றியதும் BRC போய் விடுவார்கள். அடுத்த நொடியில் பள்ளிக்கும் பார்வையிட்டு விட வேண்டும்..!


பல இடங்களில் மருத்துவ வசதி இல்லை. குடிநீர் வசதி இல்லை.


தேவையில்லாத மன அழுத்தம், பதற்றம் காரணமாக மானாமதுரையில் பலியான ஆசிரியர் பயிற்றுநர் சின்னத் தங்கம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கும்... அவை ஒரு பக்கம் இருக்கட்டும்..!


ஆசிரியர் பயிற்றுநர்கள் வாழ்வில் அக்டோபர் 20-2021 கலந்தாய்வு ஒரு போதும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அப்படி அவர்கள் மறக்க நேர்ந்தாலும் கூட மறைந்த நண்பர் மானாமதுரை சின்னத் தங்கம் அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பார் என்பது மட்டும் உறுதி..!


*இத்தனை சிரமங்கள் இருந்த போதிலும் இந்த கலந்தாய்வு மூலம் கல்வியை மேம்படுத்தும் வகையில், பணித் தரத்தை உயர்த்தும் வகையில் என்ன சாதித்துள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்..!* 

-

தேனி சுந்தர்

BRTE பூச்சிய கலந்தாய்வு : அரசு சாதித்தது என்ன? BRTE  பூச்சிய கலந்தாய்வு : அரசு சாதித்தது என்ன? Reviewed by Rajarajan on 21.10.21 Rating: 5

கருத்துகள் இல்லை