11 மற்றும் 12 ம் வகுப்பிற்கு இனி ஆண்டுக்கு இருமுறை தேர்வு - சிபிஎஸ்இ
11 மற்றும் 12 ம் வகுப்பிற்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024-ம் ஆண்டுக்கான பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் நடத்தப்படும் இரண்டு பொதுத் தேர்வுகளில், எதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்கள் இரண்டு மொழிப் பாடங்களை படிக்க வேண்டுமென்றும், அதில் ஒன்று கட்டாயம் இந்திய மொழியாக இருக்கவேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு புதிய கல்வி கொள்கையை வெளியிட்டது. அந்தக் கல்வி கொள்கை ஒன்றிய அரசு சார்பில் நடத்தபடும் கல்வி நிறுவனங்களில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
எனினும் கடந்த பாஜக ஆட்சியில், நாட்டிலேயே முதல்முறையாக 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை அமல் செய்யப்பட்டது. எனினும் 2023 சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு, அங்கு புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை