மாவட்ட கல்வி அதிகாரிக்கு மதுரை கிளை 4 வாரம் சிறை தண்டனை விதித்து உத்தரவு
மதுரை - நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட் மதுரை கிளை 4 வாரம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2019-ல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார். மனுவில் 2015-ல் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில், தான் பணிக்கு சேர்ந்தேன். தனது பணியை வரன்முறை செய்து பணப் பலன்களை வழங்க உத்தரவிடக் கோரிக்கை விடுத்திருந்தேன். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மனுதாரருக்கு பணியை வரன்முறை செய்து பணப் பலன்களை வழங்க உத்தரவிட்டிருந்தது.தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து 2020-ல் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடியானது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகியும் 3 ஆண்டுகளாக உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி மாவட்ட கல்வி அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பசில் ஜவாகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவுகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்றம் என்பது பல விசாரணைகளை நடத்தி அதன் பிறகு தான் உத்தரவு பிறப்பிக்கின்றது.ஆனால் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட அதிகாரி, நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. இத்தனை வருடங்களாக நிறைவேற்றாமல் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பின்பு பணி நியமனம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மாவட்ட கல்வி அதிகாரி நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகிறார். எனவே கல்வி அதிகாரிக்கு 4 வார சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.அச்சமயம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக கல்வி அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, கல்வி அதிகாரியின் 4 வார சிறை தண்டனையை, உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை