பள்ளித்தலைமை ஆசிரியர்கள் சஸ்பென்ட் ஆக அவதாரம் எடுத்தவர்களா?
பள்ளித்தலைமை ஆசிரியர்கள் சஸ்பென்ட் ஆக அவதாரம் எடுத்தவர்களா?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக கணக்குக்குழு இரண்டு பள்ளிகளில் ஆய்வு செய்து அங்கு சாராய காலி பாட்டில்கள் கிடந்ததாகக்கூறி அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மீது சஸ்பென்ட் நடவடிக்கை எடுத்து சென்றது.
பொதுமக்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த பேசும் பொருளாக இது மாறியதால் ஒட்டுமொத்த ஆசிரியர் குலத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது.இன்று எத்தனை பள்ளிகளில் இரவுக்காவலர்கள்,துப்புரவாளர்கள்,அலுவலக உதவியாளர்கள் உள்ளனர் என்ற விபரம் அந்த கணக்குக்குழுவுக்கு தெரியுமா?இன்று பல பள்ளிகளில் பாதுகாப்பான காம்பவுண்ட் சுவர்கள் கிடையாது என்பதும் இரவு நேரத்தில் பல பள்ளிகள் சமூகவிரோதிகளின் பார்களாக மாறியுள்ளது என்பதையும் கணக்குக்குழுவுக்கு தெரியுமா?மாணவனை வைத்து சாராய பாட்டில்களை அகற்றினால் தினசரி பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு தலைமையாசிரியரை சஸ்பென்ட் செய்ய வைக்கின்றன என்பதும் தெரியுமா?அரசும் ஆட்களை நியமிக்காமல்,மாணவர்களையும் வளாக சுத்தம் செய்ய அனுமதிக்காமல் இருந்து கொண்டு பள்ளியை,பாட்டில் களை சுத்தப்படுத்தவில்லை எனக்கூறி சஸ்பென்ட் செய்வதானால் இந்த கணக்குக்குழுவுக்கு வேறு எந்த இடமும் கண்ணில்படவில்லையா?
நீர்நிலைகள் அனைத்திலும் சாராய பாட்டில் களை சர்வசாதாரணமாக பார்க்கமுடியும்.அப்படியானால் அதனை கண்காணிக்கத்தவறிய பொதுப்பணித்துறை பொறியாளரை ஏன் சஸ்பென்ட் செய்யவில்லை?
ரயில்வே தண்டவாளங்களில் சாராய பாட்டில்கள்.ரயில்வே மேலாளரை ஏன் சஸ்பென்ட் செய்யவில்லை?பேருந்து நிலைய வளாகங்கள், சாக்கடைகள் அனைத்திலும் சாராய பாட்டில்கள்.போக்குவரத்து நிர்வாக இயக்குநரை ஏன் சஸ்பென்ட் செய்யவில்லை?
வயல்வெளிகள்,காடு,தோட்டங்கள் அனைத்திலும் சாராய பாட்டில்கள்.விவசாய இணை,துணை இயக்குநர்களை ஏன் சஸ்பென்ட் செய்யவில்லை?
பாரதி கூறிய வரிகள் 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்பது 'எங்கெங்கு காணினும் பாட்டிலடா'என மாறிவிட்ட நிலையில் சஸ்பென்ட் செய்ய வேண்டியவர்களின் பட்டியல் மிக நீளம்.சொல்லப்போனால் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இதன் காரணகர்த்தாவும் சிக்கப்போவதில்லை.ஆனால் கேட்பதற்கு நாதியற்ற பிள்ளைப்பூச்சிகளாய் விளங்கும் தலைமையாசிரியரை மட்டும் சஸ்பென்ட் செய்தால் எல்லா பிரச்சினை களும் தீர்ந்துவிடும் என நினைக்கும் அதிபுத்திசாலிகளுக்கு ஆசிரியர், தலைமையாசிரியர்கள் மீது அப்படி என்ன வெறுப்போ தெரியவில்லை.
நாஞ்சிலார்.
கருத்துகள் இல்லை