திவால் ஆகும் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் – புதிய சட்டம் இன்று அமல்!
இந்தியாவில் செயல்பட்டு வரும் எந்தவொரு வங்கியும் திவால் ஆனால், அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளார்கள் ரூ.5 லட்சம் காப்பீடு பெற்றுக்கொள்ளும் ஒரு புதிய சட்டம் இன்று (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது.
பொதுவாக ஒரு வங்கி திவால் ஆக நேரிட்டால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை காப்பீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து திரும்ப கொடுக்கப்படும். இந்த செயல்பாடுகள் இதுவரை அமலில் இருந்து வந்தது. இந்த சேவைகளை மாற்றி, காப்பீடு செய்யப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் புதிய சட்டத்தை கடந்த ஆண்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை அமல்படுத்துவதற்காக ‘காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக’ சட்டத்தில் சில திருத்தங்களையும் மத்திய அரசு ஏற்படுத்தியது.
தற்போது இந்த புதிய திருத்தம் இன்று (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி, ஒரு வங்கி திவால் ஆக நேரிட்டால் அந்த வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி ரூ.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ள முடியும். இந்த பணம் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 90 நாட்களில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அதாவது திவால் ஆன வங்கியின் கணக்குகள், அதன் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு 45 நாட்கள் தேவைப்படும். இதையடுத்து காப்பீட்டு நிறுவனங்கள் அந்த கணக்குகளை பரிசீலித்து 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கான பணத்தை அனுப்பி வைக்கும்.
இதற்கு முன்னதாக இருந்த சட்டத்தின் கீழ், திவால் ஆன வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் வரை பணம் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் 10 ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. ஆனால் இனி வரும் நாட்களில் இந்த பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு, 90 நாட்களுக்குள் கிடைக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு வங்கியும், வாடிக்கையாளர்களின் ரூ.100 வைப்புத் தொகைக்கு 10 பைசாவை காப்பீட்டுக்கான பிரீமியமாக செலுத்தி வருகிறது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய சட்டம் வணிக, வெளிநாட்டு, சிறு, கிராமப்புற, கார்ப்பரேட் வங்கிகள் அனைத்துக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை