Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போல தற்காலிக ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு

 நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போல, பணியில் சேர்ந்து ஓராண்டு முடித்த தற்காலிக அரசு ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.





தமிழகத்தில் திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த சலுகை, பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.






தற்காலிக ஊழியர்கள்




ஆனால், இந்த அரசாணைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. பல மாவட்டங்களில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும், பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்குவது இல்லை. அவர்களது விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. தற்காலிக அரசு பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராஜகுரு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.




பாரபட்சம் இல்லை




இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மகப்பேறு விடுப்பில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று நீதிபதிகள் கருத்து கூறினர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.




முடித்து வைப்பு




அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே அரசு பாரபட்சம் ஏதும் காட்டுவதில்லை. வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை பெற்றுக்கொள்ளலாம். மகப்பேறு விடுப்பை 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக (ஓர் ஆண்டு) அதிகரித்து கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது’’ என்று கூறினார்.




இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போல தற்காலிக ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போல தற்காலிக ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு Reviewed by Rajarajan on 18.9.21 Rating: 5

கருத்துகள் இல்லை