தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 18 தாக்கல்
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வருகிற மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அவர்கள் அறிவித்து உள்ளார். மேலும் மானிய கோரிக்கை விவாதம் மார்ச் 24ம் தேதி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல்:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் வேலைவாய்ப்புகள், தொழில் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்பட்டது. இதற்கடுத்து 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து விவாதிக்க கடந்த மார்ச் 5ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு அவர்கள், வருகிற மார்ச் 18ம் தேதி 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இம்முறையும் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் வருகிற மார்ச் 24ம் தேதி முதல் தொடங்குகிறது. இம்முறை கேள்வி நேரம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை