Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

"ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்" என்ற தமிழக அரசின் கொள்கை எதிர்த்து TNGEA கண்டன அறிக்கை

 

அன்புடையீர், வணக்கம் !


நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் நிதித்துறை மானியக் கோரிக்கையில் "ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் 2023-2024க்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை, தேசிய ஓய்வூதியத் திட்டமாக மாற்றி, ஓய்வூதியத் திட்டத்தில் திரட்டப்பட்ட தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் முதலீடு செய்வது குறித்து உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த செய்தியானது அனைத்து


அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (புதிய ஓய்வூதியத் திட்டம்) கைவிட்டுவிட்டு வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை (பழைய ஓய்வூதியத் திட்டம்) திரும்பக்


கொண்டுவரப்பட வேண்டும் என அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பிற அரசு சார்பு நிறுவனப் பணியாளர்களும் கடந்த இருபது ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் ஏன் அவசியம் என்பதை உணர்ந்து கொண்டு கடந்த காலங்களில் எங்களுடன் நின்று எங்களுக்காக நியாயம் கேட்ட மாண்புமிகு தமிழக முதல்வரே தற்போது அதற்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருப்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கிறது.


2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மேற்கொண்ட பரப்புரைகளிலும், தேர்தல் அறிக்கையிலும் திமுக அரசு ஆட்சியமைத்ததும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது அதற்கு நேர்எதிராக, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் உடனடியாக உறுதியான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது நம்ப வைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகமாகும்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட மூன்று அமைச்சர் பெருமக்களை சந்தித்தபோது கூட அவர்கள் சட்டமன்ற கூட்டத் தொடர் வரை பொறுத்திருங்கள் முதல்வர் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகளில் சிலவற்றை நிச்சயம் நிறைவேற்றி உத்தரவிடுவார் என்று உறுதியளித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.


01.06.1988 முதல் ஒன்றிய அரசின் ஊதிய விகிதங்கள் மாநில அரசு பணிகளுக்கும் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்கள் அரசின் நிதி ஆதாரங்களால் ஈடுகட்டமுடியாத அளவிற்கு அதிகரித்து வந்ததாகவும் இதனால் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நலத் திட்டங்களை நிறைவேற்ற போதிய நிதியில்லா நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசின் செலவினங்கள் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றினை வழங்கியதன் காரணமாக போதிய நிதியில்லா நிலை ஏற்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும்.


இப்படி ஒரு காரணத்தைச் சொல்வதற்கு எந்த ஒரு மாநில அரசும் வெட்க 1 வேண்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பவை ஒரு மக்கள் நல அரசின் மறுக்கமுடியாத கடமையாகும். 1988ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியிலிருந்த திமுக மற்றும் அதிமுக அரசாங்கங்கள் நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கான வழிமுறைகள் எதையும் காணாமல், அரசுக் கருவூலத்தில் இருந்த பணங்களை எல்லாம் தங்கள் தேர்தல் ஆதாயங்களுக்காக இலவசங்களாகவும் பொங்கல் பரிசாகவும் வழங்கிவிட்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தால் நிதி செலவினம் அதிகரித்து விட்டதாக அபாண்டப் பழியைப் போடுவது ஜீரணிக்க முடியாத ஒன்றாகும்.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினால் பணியாளர்கள் நிதியிழப்பை சந்தித்து வருவதை இந்த அரசு 20 வருடங்களுக்குப் பிறகே உள்வாங்கிக்கொண்டுள்ளது என்பதும் அதற்கு வருடாந்திர திட்டத்தை உருவாக்குவதற்கு முறையான கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் அரசு பணியாளர்கள் நிதியிழப்பை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும், பாதுகாப்பின்மைக்கும் ஆளாவதாக தெரிவித்துள்ளதும் கொள்கை விளக்கக் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது.


இந்த காரணங்களை நாம் பலமுறை இந்த அரசாங்கத்திற்கும் இதற்கு முன்னிருந்த அரசாங்கங்களுக்கும் தெரிவித்தும் பாராமுகமாக இருந்துவிட்டு இப்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பாதுகாப்பற்ற தன்மையை புரிந்துகொண்டுள்ள அரசு அதனை சமன் செய்யும் விதமாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற நடவடிக்கை எடுக்க முன்வராமல் அதே போன்றதொரு வாழ்வாதாரப் பாதுகாப்பற்ற தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு 

ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை சேர்க்க முன் வந்திருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. ஏற்கனவே தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து வெளியேறி பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நான்கு மாநிலங்கள் மாறியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மட்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுத்து நகர்வது தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் உயிருடன் சவக்குழியில் தள்ளி மண்ணைப் போட்டு மூடுவதற்கு ஒப்பானதாகும்.


மேலும் நூறாண்டாக தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகளான


8 மணி நேர வேலை நேரம், வேலைக்கேற்ற ஊதியம், தொழிலாளர்களுக்கான சமூகப்


பாதுகாப்பு, நிரத்தர வேலை போன்றவற்றை ஒழித்து 12 மணி நேர வேலை, ஊதியங்களை


குறைந்தபட்சமாக நிர்ணயித்தல், தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன்களைக் குறைப்பது,


ஒப்பந்த வேலை முறை போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத் திருத்தங்களை


ஏப்ரல் 12ஆம் தேதி 40 நொடிகளில் குரல் வாக்கெடுப்பு மூலம் திறைவேற்றியிருக்கிறது திமுக


அரசு,


இதன்மூலம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து மே தின பரிசு கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின். இந்தியாவில் பாஜக அல்லாத வேறெந்த மாநிலங்களும் அமல்படுத்த துணியாத பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்ட திருத்தம் 65ஏ-வை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதன் மூலம் மோடியின் வழியில் அவரையும் முந்தி நடைபோட ஆரம்பித்திருக்கிறார் மாண்புமிகு தமிழக முதல்வர்.


திராவிடமாடல்ஆட்சி என்ற லேபிளில் சமூக நீதிக்கெதிரான அனைத்துகாரியங்களையும் செய்ய ஆரம்பித்துவிட்ட இந்த ஆட்சி திராவிட மாயை ஆட்சி என்று சொல்வதைத் தவிர வேறென்ன செய்வது, இந்த நொடியிலிருந்து இந்த ஆட்சிக்கு எதிராக ஊழியர்களையும் தொழிலாளர்களையும் ஆசிரியர்களையும் பணியாளர்களையும் ஒன்று திரட்டி போடப்பட்ட சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் அனைத்து தொழிலாளர் வர்க்கமும் உழைப்பாளர் வர்க்கமும் வீதிக்கு இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை.


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே நீங்கள் கொண்டு வந்திருக்கும் கறுப்பு சட்டங்களையும், திட்டங்களையும் நீங்களே விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கார்ப்பரேட்டுகளின் சேவகனாக நீங்கள் இருப்பதை விட அரசு ஊழியர் தொழிலாளர்களின் நாயகனாக இருக்கப் பாருங்கள். நீங்கள் மாறாவிட்டால் உங்களை மாற்றும் வேலைகளை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொழிலாளர்களும் மேற்கொள்ள வேண்டி வந்துவிடும் என்பதை தெரிவித்துக் கொள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடமைப்பட்டுள்ளது.


மு.அன்பரசு

மாநிலத் தலைவர்




"ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்" என்ற தமிழக அரசின் கொள்கை எதிர்த்து TNGEA கண்டன அறிக்கை "ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்" என்ற தமிழக அரசின் கொள்கை எதிர்த்து TNGEA கண்டன அறிக்கை Reviewed by Rajarajan on 21.4.23 Rating: 5

கருத்துகள் இல்லை