Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா?

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா? என அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் (LKG -UKG) தொடங்க சமூக நலம் மற்றும் சத்துணவு துறை சார்பில் முடிவெடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 52,933 குழந்தைகளுக்கு மழலையர் (எல்.கே.ஜி , யு.கே.ஜி) வகுப்புகள் நடத்த ஏதுவாக அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உபரியாக உள்ள 5,934 இடைநிலை ஆசிரியர்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பள்ளிகளில் உள்ள 1979 ஆசிரியர்களையும், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நடத்துவதற்காக நியமித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த அரசாணையை எதிர்த்து, தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அரசாணை செல்லும் என தீர்ப்பளித்தது.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய தன்னை அதே பள்ளியில் அமைந்துள்ள அங்கான்வாடி மையத்தில் மழலையர் வகுப்பெடுப்பதற்காக (LKG -UKG) நியமித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரி சுமதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அரசுப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற உபரி ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அங்கன்வாடி மையத்துக்கு மாற்றியுள்ளதாக, ஆசிரியர்கள் தங்கள் மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழகம் முழுவதும் 7,000 இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாகவும், அவர்களை மாற்றம் செய்து நியமிக்க கால அவகாசம் ஆகும் என்பதால் தற்காலிகமாக சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களை நியமித்துள்ளதாகவும், விரைவில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் பணியிடம் உள்ளிட்ட விவரங்கள் இறுதி செய்யப்பட்டு நியமிக்கப்படுவர் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது மழலையர் வகுப்பு எடுக்க நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதங்கள் உள்ளிட்ட மற்ற பயன்களில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அங்கான்வாடி மையங்களில் தற்காலிகமாக தற்போது பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் ஏழை எளிய பெற்றோர்கள் சேர்க்க முடியாது என்பதை கருத்தில் கொண்டே, அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் எல்.கே. ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கபட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்த நீதிபதி, இடைநிலை ஆசிரியராக பணியாற்றிவிட்டு அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா? என கேள்வி எழுப்பினார்.

இட மாறுதல் தொடங்கி அரசின் ஒவ்வொரு முடிவையும் எதிர்த்து வழக்கு தொடர்வதை சமீபகாலமாக ஆசிரியர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.

அங்கன்வாடி மையங்களில் நியமிக்கப்படவுள்ள உபரி ஆசிரியர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா? அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா? Reviewed by Rajarajan on 13.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை