இனி கல்வி வியாபாரம் இல்லை- அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அவர் அறிவித்த கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு போன்றவை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது ஆந்திராவில் இனி கல்வி வியாபாரம் இல்லை என்ற முறையில் புதிய மசாதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் அம்மாநில முதலமைச்சர்.
புதிய மசோதா
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி தன் மாநில மக்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். குறிப்பாகக் கல்வி, இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். அதன் வரிசையில் தற்போது பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் வகையில் மசோதா ஒன்றை ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
தனியார் பள்ளிகளின் கட்டணம்
ஆந்திராவில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தல், கல்வியின் தரத்தை அதிகரித்தல் உள்ளிட்டவை இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக உள்ளன. மேலும், இதனைச் செயல்படுத்தும் வகையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு உறுப்பினர்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிப்பர்.
கல்வியின் தரத்தை கண்காணிக்க
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மசாதாவில் கல்வி ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையம் கல்விக் கட்டணத்தைத் தாண்டி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியின் தரம் மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்றவற்றையும் கண்காணிக்கும்.
கல்வி வியாபாரம் இல்லை
இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, "நம் சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள அமைச்சர்களில் பலர் சொந்தமாகப் பள்ளி, கல்லூரிகளை வைத்துள்ளனர். அந்த கல்வி நிறுவனங்களில் எல்.கே.ஜி, யூகே.ஜி போன்ற ஆரம்பக் கல்வி வகுப்புகளுக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.
இனி கல்வி வியாபாரம் இல்லை- அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
Reviewed by Rajarajan
on
30.7.19
Rating:
கருத்துகள் இல்லை