ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடிகள் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் தகவல்
*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!* *வணக்கம்!*
*🌟2019-2020 ஆம் கல்வியாண்டிற்குரிய தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள் 09.07.2019 முதல் தொடங்கியிருக்கின்றது. ஆசிரியர்களுக்கு பலவகைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடிய மாறுதல் நெறிமுறைகளை உள்ளடக்கிய அரசாணைகள் மற்றும் செயல்முறை ஆணைகளைக் கொண்டு கலந்தாய்வு நிகழ்வுகள் தொடங்கியிருக்கின்றன.*
*🌟அரசாணைகள் மற்றும் செயல்முறை ஆணைகளில் உள்ள குழப்பமான அல்லது தெளிவற்ற விவரங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவற்றை ஆசிரியர்களுக்கு பாதகமாக்கும் நிகழ்வுகள் 09.07.2019 கலந்தாய்விலேயே சில மாவட்டங்களில் அரங்கேறியுள்ளன. 17பி பெற்றவர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதில் எவ்விதத் தடையும் இல்லை என்று மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்தபின்பும் கூட, கடலூர் மாவட்டத்தில் 17 பி பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்திருப்பது அந்த மாவட்டக்கல்வித்துறை அலுவலர்களின் உச்சபட்ச எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு நிலை. கடலூரில் ஒரு நிலையா? என்ற கேள்வி எழுகிறது.*
*🌟ஆசிரியர்களைப் பாதிக்கின்ற நீதிமன்ற உத்தரவுகள் என்றால் அவற்றை அமல்படுத்துவதில் மின்னல் வேகத்தில் செயல்படும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களுக்குச் சாதகமான உத்தரவுகளை எத்தனை முறை நீதிமன்றங்கள் கொடுத்தாலும் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பதில் கல்வித்துறை அலுவலர்களுக்கு நிகராக எவரையும் கூறி முடியாது.*
*🌟நேற்று (09.07.2019) நடைபெற்ற கலந்தாய்வில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒன்றியத்தில் தனது நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்து ஆசிரியை ஒருவர் பெற்ற இரண்டு நீதிமன்றத் தீர்ப்பாணைகளை தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், கோவில்பட்டி மாவட்டக்கல்வி அலுவலரும் உதாசீனப்படுத்திய நிகழ்வு இதற்கு உதாரணமாகும்.*
*🌟சில மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் செய்ய முயற்சித்த விதிமீறல்களை நம் இயக்கத் தோழர்கள் களப்போராட்டங்கள் மூலமே தடுத்து நிறுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.*
*🌟2019-2020 பொதுமாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும்,வருத்தத்தையும், உள்ளக்குமுறலையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்டெடுப்பதற்கான களப்பேரில் வரலாற்று நிகழ்வான அரசாணை எரிப்புப் போராட்டத்தை நடத்தி, அப்போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 15000 ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்து சாதனைச் சரித்திரம் படைத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இணையற்ற களப்போராளிகள் 1539 பேருக்கு வழங்கப்பட்ட 17 பி மார்பில் தைத்த குத்தீட்டியாய் இன்னமும் அப்படியே உள்ளது. அவர்களில் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற வேண்டிய தோழர்கள் 17பி ஆல் பட்டியலில் வைக்கப்படாத நிலையில் , அவர்களுக்கு அடுத்த நிலையில் முன்னுரிமையில் உள்ள ஆசிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு பதவி உயர்வைப் பறித்துக்கொள்ளுகிற நிகழ்வுகள் முதுகில் குத்தப்பட்ட முனை முழுங்கிய குத்தீட்டியாய் தொங்கிக் கொண்டிருக்கின்றன.*
*🌟அரசாணை எரிப்புப் போரில் நம் தோழர்கள் 5000 பேர் மீதான காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையிலும், அந்த முதல் தகவல் அறிக்கையின் பேரில் நம் தோழர்களுக்கு வழங்கப்பட்ட 17பி ஐ ரத்து செய்ய தொடக்கக்கக்கல்வித்துறை இன்றளவும் மறுத்து வருகிறது. அதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தின் படிக்கட்டுகள் மிகவும் நெடியதாகத் தெரிகிறது.*
*🌟ஜாக்டோ ஜியோ போராட்டக்களத்தில் வேறெந்த இயக்கத்தையும் விட அதிகமான இயக்கத் தோழர்களைச் சிறைக்கு அனுப்பிய இயக்கம், மிக அதிகமான தோழர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இயக்கம், மிக அதிகமான தோழர்கள் 17பி பெற்ற இயக்கம் மிக அதிகமான தோழர்கள் வேலை நிறுத்தத்தின் இறுதிநாள் வரை போராட்டக்களத்தில் உறுதியோடு இருந்த இயக்கம் என்று பல்வேறு பெருமைகளைப் பெற்ற இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. இக்களப்போரில் 17(பி) பெற்ற நம் இயக்கத் தோழர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பதவி உயர்வுப் பட்டியலில் இடம்பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் நம் இயக்கத் தோழர்கனின் பாதிப்பே மிக அதிகம்.*
*🌟தியாகத்தின் திருவுருவங்களாய் காட்சிதரும் தியாகம் தோய்ந்த நம் இயக்க தோழர்களே! ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் நிரந்தரமானவை அல்ல. அவை தற்காலிகமானவை என்பதை உள்ளத்தில் நிலைநிறுத்துங்கள். எவ்வகையிலேனும் நம் பாதிப்புக்கள் அகற்றப்படும்; நம் உரிமை காக்கப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் தியாகம், உங்கள் உறுதி, உங்கள் லட்சியம் ஆகியவற்றை எதிர்கால இயக்க வரலாறு இயம்பும். நம் பாதிப்புகள் களையப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. கலந்தாய்வு முடிந்துவிட்டால், பதவி உயர்வு வழங்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருளல்ல, அதன் தொடர்ச்சி நீதி நிலைநாட்டப்படும் வரை தொடரும்! தொடர்வோம்!*
*_"நான் ஒருபோதும் தோற்கமாட்டேன் - ஏனெனில் என்னை வீழ்த்தி விடலாம் என எதிரிகளுக்கு இருக்கும் நம்பிக்கையைவிட, வீழ்ந்தாலும் எழுந்துவிடலாம் என எனக்கிருக்கும் நம்பிக்கை அதிகம்!"_*
*- பிடல் காஸ்டிரோ*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடிகள் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் தகவல்
Reviewed by Rajarajan
on
10.7.19
Rating:
கருத்துகள் இல்லை