இன்று ஏன் இப்பதவிக்கு வந்தோம் என்று மனம் வெதும்பும்.... நிலையில் ஆசிரியர்கள்
நாளையும் நாளை மறு தினமும் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தலைமையில் மதுரை மாவட்ட பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் குறித்த ஆய்வு நடைபெற உள்ள நிலையில் இந்த ஆய்வு குறித்து ஆசிரியர்கள் மனதில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடை காண விழைவதே இந்த கடிதத்தின் நோக்கம்.
முதலில் அடிப்படையான ஒரு கேள்வி இந்த குழுவில் இடம் பெற்றவர்கள் எத்தனை பேர் ஆசிரியர் தொழிலை பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்து பதவி உயர்வாக இன்று உயர் பதவியில் இருப்பவர்கள்? என்று கேள்வி எழுகிறது ஏனெனில் எத்தனை படித்திருந்தாலும் களத்தில் நின்று மாணவர்களுடன் உரையாடி அவர்களின் உளவியலை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் கொள்கை முடிவுகளையும் எதிர்கால திட்டங்களையும் வகுப்பவர்கள் தான் சிறந்த தலைவர்கள்.
உயரதிகாரிகள்
ஆனால் இன்று பள்ளி கல்வித்துறையில் மேல்மட்டத்தில் இருக்கும் அத்துணை அதிகாரிகளும் ஆசிரியர்கள் அல்ல. நேரடி நியமனமாக மாவட்ட கல்வி அலுவலராக வந்து இன்று இணை இயக்குனர்களாகவும் இயக்குனர்களாகவும் இருப்பவர்கள் ஒரு பக்கம் .
இவர்களுக்கு தலைமையாக IAS கேடரில் ஒரு ஆணையர் இவ்வித அமைப்பு கல்லூரி கல்வி இயக்கத்தில் இல்லை.
ஆனால் பள்ளிக்கல்வித்துறையிலோ 20 ஆண்டு 30 ஆண்டு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு கூட கல்வித்துறையின் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் நிர்வாகத்தில் பங்குவதற்கும் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை மிகப்பெரிய அநீதி இதுதான் இன்றைய பிரச்சனைகளுக்கு மூல காரணமாக திகழ்கிறது
உதாரணமாக ஒரு சிறு விளக்கத்தின் மூலம் இதை விளக்குகிறேன். கற்றல் - கற்பித்தல் என்பது ஆசிரியரிடமிருந்து ..........ஒரு தூண்டுதல் .....அதற்கு ஏற்ப மாணவர்கள் ஏற்படும் துலங்கல் இதுதான் அடிப்படை. துலங்கல்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் வேறுபடும்
. INDIVIDUAL DIFFERS.
அதற்கேற்றவாறு கற்பித்தல் நுணுக்கங்களை(Teaching techniques) அந்த வகுப்பறை பாட நேரத்தில் ஆசிரியர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது ஆனால் இந்த பார்வையிடல் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் வலியுறுத்துவது ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு பிரிவேளைக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு லெசன் பிளான் முன்கூட்டியே தயாரிக்க சொல்லுகிறார்கள் இது எப்படி சாத்தியமாகும்?
கல்வி உளவியலை புரிந்து கொள்ளாதவர்கள் செய்யும் செயலாகும் இது. அதுபோல ரெமடியில் டீச்சிங் என்பது அந்தப் பாடப் பொருளை அந்தப் பாட வேளையில் நடத்திய பின் எத்தகைய குறைதீர் கற்றல் செயல்பாட்டை வழங்க வேண்டும் என்பது... அப்பொழுதுதான் தீர்மானிக்க முடியும் அது முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது இதையும் பதிவேடு ஆக தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் வாயிலாக நெருக்கடி தரப்படுகிறது இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடவேளைகளுக்கும் பதிவேடுகளை மட்டுமே தயாரித்துக் கொண்டிருந்தால் கற்களை கற்பித்தலையும் ஆசிரியர்கள் எந்த காலத்தில் செய்வது?
மேலும் தினந்தோறும் வீட்டுப்பாடம் கொடுக்க சொல்கிறார்கள் தினந்தோறும் கொடுக்கப்படும் வீட்டுப் பணியை மீண்டும் மதிப்பீடு செய்ய எந்த நேரத்தை எடுத்துக் கொள்வது? மறுநாள் கற்றல் கற்பித்தல் பாடவேளையைத் தானே எடுத்துக் கொள்ள முடியும் ?
மேலும் மதிப்பீடு
என்பது அந்தந்த பாட வேளையிலேயே ஒரு நல்ல ஆசிரியர்களால் செய்ய முடியும். 30 நிமிடம் ஒரு பாடப் பொருளை கற்பித்தால் கடைசி 10 நிமிடங்கள் வினாக்கள் வாயிலாகவும் செயல்பாடுகளின் வாயிலாகவும் மதிப்பிட முடியும் இதற்கென தனியாக ரெமடியல் டீச்சிங் என்று எழுதி பதிவேடுகளை பராமரிக்க சொல்வது கால விரயத்தையும் வீணான மன உளைச்சளையும் கற்றல் கற்பித்தல் நேரத்தையும் பாதிக்கும் என்பதை அறியாதவர்களா அதிகாரிகள்?
இந்த வேளையில் தான் ஒரு சந்தேகம் எழுகிறது.
இவ்வாறு பதிவேடுகளை பராமரிப்பதும். EMIS பணிகளை செய்வதும் ஆசிரியர்களின் பள்ளி நேரத்தை விழுங்கி விட்டால் கண்டிப்பாக கற்பித்திலின் தரம் குறையத்தான் செய்யும் பெருந்தொற்று காலத்தில் தனியார் பள்ளிகளில் இருந்து மீண்டு அரசுப் பள்ளிக்கு வந்த மாணவர்களை மறைமுகமாக மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி போகச் செய்வதற்கான மறைமுக தந்திரமோ இது என தோன்றுகிறது.
மறுபக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக RESULT ORIENTED ஆக...பாடம் நடத்தி பாடப் பொருளை முழுவதும் விளக்காமல் மாணவர்களை பாஸ் பண்ணச் செய்வதிலேயே ஆசிரியர்களின் கற்பித்தல் நிகழ்வை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட மாணவர் கூட்டம் .
தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அதிகாரிகள் புதிய புதிய கையேடுகளையும் வழிமுறைகளையும் வகுத்து வகுப்பறை கற்றல் கற்பித்தலின் ஜீவ நாடியையேமனனம் செய்வது - ஒப்பிப்பது தினந்தோறும் தேர்வு---( சரியாக வாந்தி எடுக்கும் வரை தேர்வு)...என்ற நிலைக்கு கொண்டு வந்து இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் அதை செய்தே பழக்கப்பட்டு விட்டனர்.
ஒரு புதிய பாடப் பொருளை மாணவனுக்கு பொருள் புரிய கற்பித்து அவனுக்கு புரிய வைத்து அதனை மதிப்பீடு செய்யும் பொழுது அதை அவன் புரிந்து கொண்டு பதில் அளித்து ....அதனால் பெரும் மகிழ்ச்சி என்பது இன்று கிட்டத்தட்ட பெரும்பாலான ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் கிடைக்கப் பெறுவதில்லை.
வகுப்பறை கற்பித்தல் என்ற ஜீவனுள்ள ஒரு நிகழ்வு இன்று வெறும் இயந்திரத்தனமாகிவிட்டது .
மேலும் எளிதாக பாஸ் பண்ணும் வழிமுறைகளை உள்ளடக்கிய கையேடுகள் வழங்கி மாணவனை அம்முறை நோக்கி தள்ளிவிட்ட பெருங்கொடுமையும் இந்த காலகட்டங்களில் நிகழ்ந்து வந்துள்ளது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடலை ஆவலை மாணவனிடமிருந்து பறித்துச் சென்று விட்டது.... இந்த 10 ஆண்டுகளுக்கு மேலான தொடர் நிகழ்வுகள்.
இப்பொழுது உள்ள ஒவ்வொரு மாணவனும் எளிதாக தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும் என்ற வினாவைத் தான் ஒவ்வொரு பாட ஆசிரியர்கள் முன்னும் வைக்கிறான் .
அதை நோக்கித்தான் அவன் பயணிக்கிறான்.
மேலும் இந்த இரண்டு ஆண்டு பெருந்தொற்று காலம் முடிந்து மீண்டும் வகுப்பறை நோக்கி வந்த மாணவர்கள் கற்பித்தல் என்னும் அற்புதமான நிகழ்வை உள்வாங்க கூடிய அளவிற்கு இல்லை. சமூக வலைதளங்களாலும் இதர மனம் கெடுக்கும் சமூக விஷயங்களாலும் பள்ளியில் புதிதாக ஒரு விஷயத்தை அவனுக்கு புகட்ட ....வகுப்பறையில் அவனது கவனத்தை பாடப்பொருள் நோக்கி ஈர்க்க ....ஆசிரியர்கள் மிகப்பெரிய திட்டங்களை வகுத்து மாணவனின் கவனத்தை கவர வேண்டியுள்ளது.
இவ்வாறு பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதலாக பாடம் கற்பித்தலை தவிர்த்து பல்வேறு பணிகளை பதிவேடுகளை பராமரிக்க செய்வது எவ்வகையில் நியாயமாகும்?
இது ஆசிரியருக்கு அநீதி. அதன் வாயிலாக மாணவனுக்கும் இழைக்கும் அநீதி இதையெல்லாம் புரிந்து கொண்டார்களா அரசும் அதிகாரிகளும்?
கல்வித்துறை அதிகாரிகளே.... அரசு பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருக்கும் விளிம்பு நிலை பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வித்தரம் உண்மையிலேயே உயர வேண்டுமானால் ஆசிரியர்களை சுதந்திரமாக விடுங்கள் தேர்வு முடிவுகளை நோக்கி ஆசிரியர்களை துரத்தாமல் வகுப்பறை கற்பித்தலை தூண்டும் வகையில் அவர்களுடைய கைகளையும் மனதையும் அவிழ்த்து விடுங்கள் .நீங்கள் முசௌரியிலும் பவானிசாகரிலும்....
அண்ணா நிர்வாக மையத்திலும் கற்றறிந்த நிர்வாக தொழில் நுட்பங்களை
(administrative and managerial techniques) பயிற்சித்து பார்க்கும் துறையாக பள்ளிகளை பயன்படுத்தாதீர்கள் .
இந்த நிர்வாக திறன்கள் பிற துறைகளில் பயனளிக்கும். கல்வித்துறையில் அல்ல இது மாணவனின்.... அவனை உருவாக்கும் ஆசிரியனின் உளவியலோடும்.. நாட்டின் எதிர்காலத்தோடும் தொடர்புடைய விஷயம்.
இவண்
இளநிலை உதவியாளராக வட்டார போக்குவரத்து துறையில் அரசு பணி வாழ்வை துவங்கி...... அங்கு நிலவிய ஊழல் காரணமாக இடைநிலை ஆசிரியராக ஒன்பதாண்டு காலம் மன மகிழ்வாக கற்பித்தல் நடத்தி தான் படித்த படிப்பிற்கு ஏற்ற பதவி உயர்வு இல்லாததால் முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதி 16 ஆண்டு முதுகலை ஆசிரியர் பணியாற்றி.... இன்று ஏன் இப்பதவிக்கு வந்தோம் என்று மனம் வெதும்பும்....
ச.கார்த்திகேயன்.
முதுகலை ஆசிரியர்
மாவட்ட செயலர்
TNPGTA.மதுரை.
தங்கள் கட்டுரை இன்றைய கல்விநிலையின் அவலத்தை கண்ணாடி போல் நன்றாகவே பிரதிபலிக்கிறது
பதிலளிநீக்குஆணையர் பதவி வந்ததே தமிழக கல்வி கட்டமைப்பை காலி செய்ய மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. நாம புலம்பறதால எதுவும் மாறப்போறதில்லை. தமிழ்நாடு கல்வித்துறையில் வட மாநிலங்களை விட கேவலமான நிலைக்கு செல்லும் வரை ஆணையர் உறங்க மாட்டார்.
பதிலளிநீக்கு