அரசு பள்ளிகளில் 950 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப கோரிக்கை!
தமிழகஅரசு பள்ளிகளில் 950 க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தலைமையாசிரியர்கள் இல்லாததால் பள்ளிகளில் நிர்வாக பணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவவால் ஓராண்டிற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் & கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9 – 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக கடந்த 1 ந் தேதி தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 950-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது. தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். ஆனால் நடப்பு ஆண்டு கொரோனா பரவலால் கலந்தாய்வு நடைபெறவில்லை. இதனால் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாததால் நிர்வாக பணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
தலைமை ஆசிரியர் கையொப்பம் இல்லாமல் பள்ளி வங்கிக் கணக்கில் இருந்து நிதியை எடுப்பது சிரமமாக உள்ளது. எனவே, நீதிமன்ற வழக்குகளை முடித்து கலந்தாய்வை அரசு விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரி கூறும்போது, பட்டதாரி ஆசிரியரில் இருந்து பதவி உயர்வில் முதுகலை ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள் மற்றும் நேரடியாக முதுநிலை ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் என இரு தரப்பினரும் தலைமை ஆசிரியர் பதவிக்கு முன்னுரிமை கோருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இம்மாதத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை