Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

5 & 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்? - Vikatan Article


5-ம் வகுப்பு மாணவன் புகழேந்தியிடம் "பப்ளிக் எக்ஸாம் அட்டவணை பார்த்தியா?" என்று கேட்டதற்கு, "அப்படின்னா என்ன?" என்கிறான் மழலை மொழியில்

5-ம் வகுப்பு பொதுத் தேர்வு 2020, ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15 அன்று தமிழ், 17 அன்று ஆங்கிலம், ஏப்ரல் 20 அன்று கணக்கு எனத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு 2020, மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. மார்ச் 30 அன்று தமிழ், ஏப்ரல் 2 அன்று ஆங்கிலம், ஏப்ரல் 8 அன்று கணக்கு, ஏப்ரல் 15 அன்று அறிவியல், ஏப்ரல் 17 அன்று சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.இந்த இரு வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், காலை 10:15 மணிக்கு தொடங்கி, 12:15 மணிக்கு முடிவடையும். மாணவர்கள் வினாத்தாள்களைப் படிப்பதற்கு 10 நிமிடங்களும், விவரங்களைப் பதிவுசெய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.



இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியபோது, "திருத்தப்பட்ட கல்வி உரிமைச்சட்டத்தில் பொதுத் தேர்வு என்று குறிப்பிடாமல், வழக்கமான தேர்வு என்றே குறிப்பிட்டுள்ளனர். மேலும், எட்டாம் வகுப்பு முடியும் வரை எந்த வாரியத் தேர்விலும் ஒரு மாணவன் தேர்ச்சிபெறவேண்டிய அவசியமில்லை என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, இதைப் பொதுத் தேர்வு என்று ஏன் குறிப்பிட வேண்டும்? வழக்கமான தேர்வுக்கும் வாரியத் தேர்வுக்கும் என்ன வேறுபாடு உள்ளது என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்தாமல், பொதுத் தேர்வு என்று ஏன் இதற்கு அரசாங்கம் ஆணை போட்டது?10 வயது குழந்தைக்கு பொதுத் தேர்வு அவசியமா? ஒரு குழந்தை, பழக்கமுள்ள நபர்களிடம் மட்டுமே எந்தப் பயமும் இல்லாமல் தனது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும். அப்படியான சூழலில், தெரியாத இடத்திற்குச் சென்று எப்படி இந்தப் பொதுத் தேர்வை அந்தக் குழந்தையால் எழுத முடியும்? மொழி ஆற்றல் இருக்கிறதா என்பதை அறியத்தானே இந்தத் தேர்வு வைக்கப்படுகிறது. அதற்கு ஏன் வேறொரு தேர்வு மையத்திற்குச் சென்று தேர்வு எழுத வேண்டும். இது, பெற்றோர்களுக்குப் பெரிய அளவில் பயத்தைக் கொடுக்காதா? குறிப்பாக, அவர்களுக்கு மதிப்பெண் குறித்த பயம் வந்துவிட்டால், அவர்கள் குழந்தைகளை என்ன பாடு படுத்துவார்கள் என்பது இந்த அரசாங்கத்திற்குப் புரியாதா?

மேலும், அனைத்துக் குழந்தைகளும் தாங்கள் படிக்கின்ற பள்ளியிலேயே தேர்வு எழுதுவார்கள் என்று எந்த உறுதியும் கிடையாது. காரணம், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சென்டரில்கூட மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி அந்தக் குழந்தை தேர்வு எழுத அடுத்த சென்டருக்குத் தயாராகும்போது, அச்சம் இல்லாமல் தனது அறிவை எப்படி சுதந்திரமாக வெளிபடுத்தும்?" என்றார் கோபமாக.
இந்தத் தேர்வுகுறித்து எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பேசினோம். "தேர்வு அட்டவணையைப் பார்த்தவுடனேயே பயம் வந்துவிட்டது. பயம் வருவதால், நான் படிக்கவே இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவி நான். இருந்தாலும், இந்தத் தேர்வு நடைமுறைகள் எப்படி இருக்குமோ என்ற கவலை இப்போதே வந்துவிட்டது. இது, பப்ளிக் எக்ஸாம் என்று சொல்கிறார்கள். அதேநேரத்தில், ஃபெயில் செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார்கள். இது குழப்பமாக இருந்தது. அதனால் எங்கள் ஆசிரியரிடம் கேட்டபோது, 'இது பப்ளிக் எக்ஸாம்தான். அதனால் நல்லா படி. இல்லைனா, அடுத்த வருஷமும் இதே வகுப்பில்தான் இருக்கவேண்டியிருக்கும்' என்று சொன்னார். அதைக் கேட்டதும் எங்களால் எப்படி பயப்படாமல் இருக்க முடியும்?" என்கிறார் தயக்கத்துடன்.



இந்தப் பொதுத்தேர்வுகள் குறித்து, குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் 'பாடம்' நாராயணனிடம் கேட்டபோது, "5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். கல்வி உரிமைச் சட்டத்தில், கட்டாய இலவசக் கல்வி மற்றும் குழந்தைகளுக்கு கல்விச் சூழலில் எந்த அழுத்தமும் கொடுக்கப்படக்கூடாது என்று கூறுகிறது. ஒரு குழந்தை, 'குழந்தை நேயச் சூழலில்' இருக்க வேண்டும் என்று அந்தச் சட்டம் வரையறுக்கிறது.


இதுவரை எந்த நாட்டிலும் இதுபோன்ற ஒரு தேர்வை நடத்தவில்லை. இந்தத் தேர்வினால் மாணவர்களுக்கு எந்த மாதிரியான நன்மைகள் விளைந்திடப் போகுகின்றன? அதை இந்த அரசாங்கம் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அதே போன்று, எந்த மாதிரியான ஆய்வுக்கு உட்படுத்தி, தற்போது இந்தத் தேர்வை மாணவர்களுக்கு வைக்கப்போகிறீர்கள் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும்.

முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட 'கரிக்குலம் கமிட்டி 'என்ன வேலை செய்தது? இந்தத் தேர்வுகுறித்து அந்த கமிட்டி ஏதேனும் பேசியுள்ளதா? என்பவை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும். புதிய கல்விக்கொள்கை இன்று வரை விவாதத்தில்தான் உள்ளது. அப்படியிருக்கும்போது, இந்த ஆண்டு 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? எதன் அடிப்படையில் இந்தத் தேர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது என்று தெரியவில்லை. கல்வி உரிமைச் சட்டத்திலும் இதுபற்றி சொல்லப்படவில்லை.

பள்ளிக் கல்விக்காக அமைக்கப்பட்ட கமிட்டியும் இது தொடர்பாக எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை. இந்த நிலையில், குழந்தைகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களை நடைமுறைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இது, ஒட்டுமொத்தமாக சட்டத்தை மீறிய செயல். இதற்கு நியாயமான தீர்வு வேண்டும் என்றால், நீதிமன்றத்திற்குச் செல்வது தவிர வேறு வழியில்லை" என்றார்.
5-ம் வகுப்பு மாணவன் புகழேந்தியிடம் "பப்ளிக் எக்ஸாம் அட்டவணை பார்த்தியா?" என்று கேட்டதற்கு, "அப்படின்னா என்ன?" என்கிறான் மழலை மொழியில்.


இதில் வேறு பார்வையை முன் வைக்கிறார், அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன். "ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேவையில்லை. ஆனால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தத் தேர்வு அவசியமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இத்தேர்வுகளால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்று கூறுவதை ஏற்க முடியாது. மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அழுத்தம் தரும் சூழல் தற்போது மாறியுள்ளது. அதனால் 5-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வை ரத்துசெய்துவிட்டு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாம்" என்றார்.
"எல்லாவற்றையுமே குறை சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது" என்று பேசத்தொடங்குகிறார், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, "பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைப்பதால், அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படலாம் என்று பலரும் பேசிவருகிறார்கள். அதை ஏற்க முடியாது. அதனால் இந்தத் தேர்வு அவசியமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. தேர்வு எழுதும்போதுதான் மாணவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள். அந்த அடிப்படையில்தான் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு வைக்கப்படுகிறது.


மாணவர்களைக் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத்தானே அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறோம். அதேபோன்றுதான், அவர்களுடைய திறமையை மேம்படுத்துவற்காகத்தான் இந்தத் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. எதற்கெடுத்தாலும் அனைத்தையும் குறைகூறிக்கொண்டிருக்கக் கூடாது. எது தேவை, தேவையில்லை என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு அதை நாம் அணுக வேண்டும்" என்றார்.

5 & 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்? - Vikatan Article 5 & 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்? - Vikatan Article Reviewed by Rajarajan on 5.12.19 Rating: 5

கருத்துகள் இல்லை