Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை!

https://i1.wp.com/www.blog.epravesh.com/wp-content/uploads/2010/05/Edu-Option-Graph.gif


பிளஸ்2 தேர்வு முடிந்து ரிசல்ட் வந்து விட்டது. பல்வேறு உயர் கல்வி படிப்புகள் குவிந்து கிடப்பதால் எந்த படிப்பில் சேரலாம் என்று முடிவெடுப்பதில் மாணவர்களும், பெற்றோர்களும் தவித்தாலும் உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய காலத்தில் இருக்கிறீர்கள்.
பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை!

அதாவது, இப்போது உங்கள் முன்னால் ஒரு பிரமாதமான விருந்துச் சாப்பாடு வைக்கப்பட்டுவிட்டது. அதில் நீங்கள் விரும்பும் உணவு வகை எது என்று தேர்ந்தெடுத்து முடிவுசெய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்புதான். நீங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும்போது, சுவையை அடிப்படையாக வைத்து முடிவெடுக்கலாம். அதேசமயம் அந்த உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும், சரியாக ஜீரணமாக வேண்டும், ருசியாகவும் இருக்க வேண்டும். அதேபோல் இங்கே பலவிதமான படிப்புகள் உள்ளன. மாணவர்களும் பெற்றோரும் இதிலிருந்து தங்களுக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது அவர்களுடைய விருப்பத்துக்கு, திறமைக்கு, பொருளாதார வசதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எதிர்காலத்தை மனத்தில் வைத்து வேலைவாய்ப்பிற்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். நீங்கள் இதுபற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

http://jobsforyouonly.com/jobs/wp-content/uploads/2016/12/5-career-path-you-can-choose-after-12th.jpg



நீங்கள் படிக்க வேண்டிய படிப்பு முடிவாகிவிட்டதா? ஆம் என்றால் அதை எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள் என்பதையும் அதை முழுமையாக ஆராய்ந்தீர்களா? என்பதையும் பற்றி அறிவது மிகவும் அவசியம்.

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை!

இது தொடர்பாக, "ஸ்டடிகைடு இந்தியா" நிறுவனத்தின் தலைவரும், கல்வியாளருமான ச.பார்த்தசாரதி நம்மிடம் விளக்குகிறார்.

நீங்கள் உங்கள் பெற்றோரின் அறிவுரை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு படிப்பை படிக்க முடிவுசெய்து முடிவெடுத்தீர்களா? ஆனால் உங்களுக்கு வேறு படிப்பில் ஆர்வம் இருக்கிறதா?

உங்கள் பெற்றோர் என்ன காரணங்களுக்காக ஒரு படிப்பை உங்களுக்கு பரிந்துரைக்கிறார்கள் என்பதை அறியவும். அவர்கள் சொல்லும் காரணங்கள் உங்களுக்கு உகந்ததாக இல்லாது போனாலோ அல்லது அந்த படிப்பு உங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைத்தாலோ அதற்குரிய காரணங்களை உங்கள் பெற்றோருக்கு பொறுமையாக விளக்குங்கள். இன்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு, உங்கள் வேலைவாய்ப்பின் திசையை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. வாழ்நாள் முழுதும் நீங்கள் அதனுடன் பயணிக்க வேண்டும். எனவே பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாமல், அவர்கள் தேர்ந்தெடுத்ததில் உள்ள பின்புலங்களை கேட்டு அறியுங்கள். மேலும் ஏன் அது உங்களுக்கு சரியான படிப்பு இல்லை என்று கருதுகிறீர்கள் என்று மனம் விட்டு பேசுங்கள், கலந்துரையாடுங்கள். உங்களுக்குள் ஒரு முழுமையான மற்றும் வெளிப்படையான கலந்தாய்வு நடந்தால் நீங்களும் உங்கள் பெற்றோரும் சேர்ந்து ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கலாம். உங்கள் பெற்றோர் உங்கள் எதிர்காலத்தை பற்றி உங்களைவிட அதிகம் அக்கறை உள்ளவர்கள் என்பதையும், உங்களுக்கு தேவையான பக்குவம் வரும் வரை உங்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உடையவர்கள் என்பதையும் உணரவும். உங்கள் குடும்பத்தில் இம்மாதிரி அமர்ந்து பேசும் சூழ்நிலை இல்லையாயின் ஒரு நல்ல கல்வி வழிகாட்டி அணுகினால் அவர்கள் உங்கள் இருவரையும் பேசச் சொல்லி உண்மையை விளக்குவார்கள்.

பெற்றோர்கள் கவனத்திற்கு: உங்கள் பிள்ளைகள் உங்களுடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கும் ஒரு சிறப்புப் பரிசாகத் திகழ்கிறவர்கள். அவர்கள் என்னவாகப் போகிறார்கள் என்று அறிந்து வழிகாட்டுங்கள். அவர்கள் எதில் ஆர்வம் செலுத்துகிறார்களோ, எதைச் சிறப்புத் தகுதியாக வளர்த்துக் கொள்கிறார்களோ அதை மட்டுமே அவர்களால் சாதிக்க முடியும். ஒருவருக்கு கணிதத்தில் ஆர்வம் இல்லாமல் அக்கவுண்டன்சி படிக்க விரும்பினால் அவரை அதில் என்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்து அதில் சேர்க்க வேண்டும். நீ என்ஜினீயர் ஆகவேண்டும் என வற்புறுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், அவர் உங்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக படிப்பார், தன்னுடைய லட்சியத்தை எண்ணி அல்ல!

உங்கள் பிள்ளைகளுடன் இதுபற்றிப் பேசுங்கள். அவர்களுடைய எண்ணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகே நீங்கள் அவர்களுக்கான படிப்பை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் முடிவேடுப்பவராக இல்லாமல், உங்கள் பிள்ளைகளை முடிவெடுக்க வைத்து வழிகாட்டுபவராக நீங்கள் இருங்கள்.

சில பெற்றோர், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தவறவிட்ட படிப்புகளைத் தங்கள் பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள். அவர்கள் மூலம் அதைச் சாதித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். உங்கள் பிள்ளைகள் நீங்கள் நினைப்பதைவிடச் சிறந்த திறமைசாலிகளாக இருக்கலாம். அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகத்திற்கு வந்துள்ளார்கள். உங்கள் ஆசையை நிறைவேற்ற வந்தவர்கள் என்று சுருக்கிக்கொள்ள வேண்டாம்.

பெற்றோர் உணரவேண்டிய மற்றொரு விஷயம், இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு வருங்காலத்தில் தவறானதாக அமைந்துவிட்டால், அதற்காக நீங்கள் வாழ்நாள் முழுதும் குற்ற உணர்வுடன் வாழ்வேண்டிவரும். எனவே, ஒட்டுமொத்தக் குடும்பமும் உட்கார்ந்து பேசி ஒரு தீர்வைக் கண்டறிய வேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் கணிதத்தில் திறமைசாலியாக இருக்கிறார். அவர் என்ஜினீயரிங் படிக்க ஆசைப்படுகிறார். ஆனால் அவருடைய தந்தை அவரை ஆசிரியர் பயிற்சியில் சேர்க்கிறார். அந்த ஆசிரியர் பயிற்சி அனுமதி பெறாதது, நீதிமன்றம் அதனை பாதியில் மூடிவிடுகிறது. அந்தத் தந்தைக்கு மிகவும் வருத்தம். ஆனால், இனிமேல் எதுவும் செய்யமுடியாது. ஆகவே, அந்த மகன் வாழ்நாள் முழுவதும் தன் தந்தையைக் குற்றம் சொல்லிக்கொண்டிருந்தான். உங்களுக்குத் தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். ஒருவேளை நீங்கள் மறுபடி பிறந்தாலும் கூட மீண்டும் இதே நபராகப் பிறக்கமுடியாது. ஆகவே, இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

நீங்கள் உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்த்துப் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா?

சின்ன வயதில் ஒரு பையன் ஐஸ் க்ரீம் விற்பவரைப் பார்த்து அதுபோல் ஆக விரும்புகிறான். அப்போதுதானே நாள்முழுவதும் ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கமுடியும்! மற்றொரு நாள் ஒரு டிரைவரைப் பார்த்துப் பரவசப்படுகிறான். அவரைப்போலவே எப்போதும் பயணம் செய்துகொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இதுபோல் நமக்கு பல ஆசைகள் வரலாம். ஆனால் அனைத்துமாக நாம் ஆனால் என்னவாகும் நம் எதிர்காலம்?

உங்கள் நண்பரின் தந்தை தன் மகன் ஒரு படிப்பை முடித்தபிறகு அதே துறையில் அவனுக்கு வேலை கிடைக்க உதவி செய்பவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் படிப்பை முடித்தபிறகு நீங்களேதான் சொந்தக் காலில் நிற்கவேண்டியிருக்கும். எனவே உங்கள் நண்பர், உறவினரிடம் பேசும்போது அவர்கள் எந்தக் காரணத்துக்காக இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று விவாதியுங்கள். அந்தக் காரணம் உங்களுக்குப் பொருந்துமா என்று யோசியுங்கள்.

ஒரு வீட்டில் பெற்றோர் மருத்துவராக இருந்தால் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு மருத்துவமனை இருக்கலாம். ஆகவே அவர்கள் தங்கள் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். படித்து முடித்தபிறகு அந்தப் பிள்ளைகள் வேலை தேடுவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அது உங்களுக்குப் பொருந்துமா? யோசித்துக்கொள்ளுங்கள்

நீங்கள் சமீபத்திய வேலை வாய்ப்பு சந்தை ஏற்றதாழ்வுகள் அடிப்படையில், அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கிறீர்களா?

வேலை வாய்ப்பு சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் ஒரு சுழற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்கச் சம்பளம் மட்டும் சரியான அளவுகோல் அல்ல. நம்முடைய சந்தை என்பது சுழற்சிபோல மாறி மாறி வரும். ஒருகாலத்தில் வங்கியில் பணிபுரிவது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அதன்பிறகு மருத்துவர்கள், இப்போது ஐடி (தகவல் தொழில்நுட்பம்), தற்போது தகவல் தொழில்நுட்பம் கொஞ்சம் தொய்வுடன் காணப்படுகிறது. ஆகவே, நீங்கள் இப்போது விரும்பித் தேர்ந்தெடுக்கும் படிப்பு முடியும்போது அல்லது அதன்பிறகு இதேமாதிரி மதிப்பு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அது உங்கள் பணி/வாழ்க்கையைப் பாதிக்குமா என்று நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். ஆனால் எந்த காலத்திலும் எல்லா துறையிலும் உரிய தகுதியுடன், கடின உழைப்புடன், போதிய துறை அறிவுடன் விளங்குபவர்களுக்கு வேலைகள் காத்திருக்கின்றன. எனவே நீங்கள் வாங்கும் கோல்ட் மெடல் முக்கியமில்லை. அந்த துறையில் எவ்வளவு ஆழமாக அறிவைப் பெற்றுள்ளீர்கள், பணி செய்ய தயாராகி வருகிறீர்கள் என்பதே முக்கியம்.

படிப்பு முடிந்து நீங்கள் பார்க்கப்போகும் வேலை உங்களுக்குப் பிடிக்காவிட்டால், உங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியாது. இதனால் வாழ்நாள் முழுவதும் சலிப்பாக உணர்வீர்கள். அதேசமயம், அந்த வேலை உங்களுக்குப் பிடித்திருந்தால் விளையாட்டு மைதானத்துக்குச் செல்வதுபோன்ற உற்சாகத்தோடு அலுவலகத்துக்குக் கிளம்பிச் செல்வீர்கள்.

ஒவ்வொரு துறையிலும் அதிகச் சம்பளம் பெறும் வேலைகள், குறைந்த சம்பளம் பெறும் வேலைகள் உண்டு. நீங்கள் எவ்வளவு உயரம் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் சம்பள விகிதமும் மாறும். இன்றைக்கு C.A., Animation, Bio Technology போன்ற மற்ற பல துறைகளும் ஐ.டி.க்கு இணையாக அதிகச் சம்பளம் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் நீங்கள் சம்பளத்திற்காக உள்ளே நுழையும்போது நன்றாக இருக்கலாம். ஆனால் நீங்கள் வளர வளர அந்த உற்சாகம் நின்றுவிடும்.

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை!

பள்ளிப் படிப்பில் சில பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றதால் அதை சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா?

நல்ல மதிப்பெண் பெறுவது மிகவும் அவசியம். ஆனால் அதை வைத்து மட்டுமே உங்கள் எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக கணிதத்தில் அதிக மதிப்பெண் எடுப்பதால் B.Sc. Maths சேரலாம் என்று முடிவெடுப்பதைவிட, B.Sc, முடித்து மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறீர்கள்? என்ன வேலைவாய்ப்பு சாத்தியம் இருக்கிறது? அது உங்களுக்கு விருப்பமானதா? போன்ற பலவற்றை யோசிக்க வேண்டும்.
உங்களுக்குக் குறுகிய காலக் கண்ணோட்டமே இருக்கக்கூடாது. உங்களால் நிறைய மதிப்பெண் எடுக்கமுடியும் என்பதால் மட்டும் உங்களுக்கு ஒரு துறையில் ஆர்வம் வந்துவிடவேண்டும் என்கிற அவசியம் இல்லை. படிப்பு என்பது வேறு, அதை சார்ந்த வேலைகள் என்பது வேறு. சில சமயங்களில் நீங்கள் நன்கு மனப்பாடம் செய்யக்கூடியவராக இருக்கலாம். அதனால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். ஆனால் நீங்கள் செய்யப்போகும் வேலை மிகவும் கடினமாக அமைந்துவிடலாம். நான் பல மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் கம்ப்யூட்டர் சயன்ஸை விரும்பித் தேர்ந்தெடுப்பார்கள். எப்படியோ மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர்களால் முழுமையாக ஈடுபட முடிவதில்லை. எனக்குத் தெரிந்த பல கம்ப்யூட்டர் சயன்ஸ் மாணவர்களுக்கு எளிய ப்ரொக்ராம்கள்கூட எழுதத் தெரிவதில்லை. ஆகவே அவர்கள் அந்த வேலைக்குத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.

நீங்கள் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தோடு படிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் பணியில் நன்றாகச் செயல்படமுடியும். மதிப்பெண்களை விட, வேலைக்கு போகும்போது நிறுவனங்கள் உங்களுடைய தகவல் பரிமாற்றத் திறமை, மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மை, தலைமைப் பண்புகள், பிரச்னைகளைத் தீர்க்கும் திறமை,அணியில் சேர்ந்து பணிபுரியும் திறமை என்று பல விசயங்களைப் பார்க்கிறார்கள். எதார்த்த வாழ்க்கையில் தங்கப் பதக்கமும், முதல் வகுப்பும், நல்ல மதிப்பெண்கள் பெற்று மற்ற திறமைகளை வளர்த்துக்கொள்ளாதவர்கள் பல வாய்ப்புகளை இழக்கிறார்கள். மட்டும் வாங்கியவர்களுக்குக் பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஒரு மாணவர் பள்ளி, கல்லூரியில் சுமாராகப் படிக்கிறவராக இருந்தால்கூட, அதோடு பல கூடுதல் ஆர்வங்களை ஏற்படுத்திக்கொண்டு நன்கு பேசக்கூடியவராக பாடப் புத்தகங்களுக்கு வெளியிலும் விசயங்களை அறிந்து வைத்திருக்கிறவராகத் தன்னை மேம்படுத்திக்கொண்டால் அவரால் பல வெற்றி எளிதாக அடையமுடிகிறது.



பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை!

உங்கள் பெற்றோரால் மற்ற படிப்புகளுக்குச் செலவழிக்கமுடியாது. ஆகவே வசதிக்கு இணங்க நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று கருதுகிறார்களா?

உங்கள் குடும்ப நிலையை உணரும் பக்குவம் இருப்பது சிறப்பு. இப்போதெல்லாம் கல்விக் கடன் மிகவும் சகஜமாகிவிட்டது. ஆகவே உங்கள் பெற்றோரால் செலவழிக்க முடியாது என்று எண்ணி ஒரு குறிப்பிட்ட படிப்பைத் தவறவிடாதீர்கள். எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசியுங்கள். ஆனால் ஒருவேளை அந்தத் தொகை கல்விக் கடனாலும் பெறமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்குமானால் அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது பற்றி நீங்கள் நன்றாக யோசித்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான கல்விக்கடன் குறித்த சந்தேகங்களை www.eltf.in என்னும் தளத்தில் சென்று கேட்கலாம். நீங்கள் உங்கள் கனவைப் பின்னர் வேறொரு வாய்ப்பு வரும்போது நிஜமாக்கிக்கொள்ளலாம். உங்களுக்குத் தெரியும், முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் ஒரு போர் விமானியாக வேண்டும் என்றுதான் விரும்பினார். ஆனால் பல காரணங்களால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. அப்போதும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. ஒரு சிறந்த ராக்கெட் விஞ்ஞானியாக உருவானார். படிப்படியாக முன்னேறி இந்தியாவின் ஜனாதிபதியானார். கடைசியாக அந்த ஜனாதிபதி பதவியில் இருந்தபடி அவர் ஒரு போர் விமானத்தில் பறந்தார். அவர் ஒரு வலுவான பொருதாளாதார பின்னணியில் இருந்து வந்தவரில்லை. எனவே உங்கள் கனவை நனவாக்க பல்வேறு கதவுகளை தட்டவேண்டிவரும்.

நீங்கள் கல்விக் கடனுக்கு முயற்சி செய்தீர்களா? இன்றைக்குக் கல்வி என்பது உங்களுடைய உரிமை. ஒரு குறிப்பிட்ட படிப்புக்கான அனுமதிக் கடிதத்தைப் பெற்றுவிட்டால் போதும். செலவுகளைச் சமாளிக்கக் கடன்கள் உதவும். www.StudyGuideIndia.com-ல் Education Loan-ஐ பார்க்கவும்

ஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாத பலர் மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் உரிமையாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். ஆகவே உங்கள் திறமைக்கு வானமே எல்லை. ஒருவேளை நீங்கள் விரும்பும் விசயம் இப்போது, உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் அதோடு உலகம் முடிந்துவிடாது. உங்கள் இலக்கை அடைய வேறு வழிகளை அணுகுங்கள்.

ஒருவர் அமெரிக்காவில் படிக்க விரும்பினார். ஆனால் அவருடைய குடும்ப பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அவர் மாற்று வழிகளைத் தேடினார் B.Sc., Computer Science படிக்கச் சேர்ந்தார். அதை முடித்துவிட்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சில வருடங்கள் இந்தியாவில் வேலை பார்த்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கே தான் வேலைசெய்யும் நிறுவனம் மூலம் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து படித்தார். தன்னுடைய நிறுவனத்தின் உதவித்தொகை பெற்றுப் படிப்பைப் பூர்த்தி செய்தார். உங்கள் இலக்கு தெளிவாக இருந்தால் அதை அடைவதற்கு பல வழிகள் தானே புலப்படும்.

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தத் துறையில் பெரிய பதவியில் உள்ளார். அவர் தன்னுடைய நிறுவனத்தில் எனக்கு ஒரு நல்ல வேலை தருவதாக உறுதியளித்துள்ளார். ஆகவே நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன் என்கிறீர்களா?

வாழ்க்கையில் இப்படி நடக்குமோ, அப்படி நடந்துவிடுமோ என்பது போன்ற குழப்பக் கேள்விகளுக்கு இடமே இல்லை. உங்கள் உறவினர் அதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்வார் என்பது என்ன நிச்சயம்? அப்படியே இருந்தாலும், நீங்கள் படிப்பை முடிக்கும் நேரத்தில் அவர் உங்களை வேலைக்குச் சேர்க்கும் அளவு செல்வாக்குடன் இருப்பாரா என்பது யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் உங்களுக்கு வேலை கொடுத்தாலும்கூட நீங்கள் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் அந்தப் பணியில் தொடரமுடியாது. ஆகவே உங்களுக்குப் பிடித்த வேலையில் சேர்கிற வாய்ப்பை வழங்கும் படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.

இன்றைக்கு ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய வேலை காலியிடங்களைப் பூர்த்தி செய்யச் சிறந்த திறமையாளர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய உறவினர் எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவர் என்பது உங்களுக்குத் தெரியாது. தவிர நீங்கள் உங்கள் திறமை மீது நம்பிக்கை வைக்கவேண்டும். வாழ்க்கையின் நோக்கம் சவால்களை எதிர்கொள்வது. அவற்றை ஒவ்வொன்றாகச் சாமாளிப்பது. இதுமாதிரி நேரத்தில்தான் நாம் பலமாகவேண்டும். வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுக்கொண்டு சவால்களைச் சந்திக்கவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் பழகவேண்டும்.

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ஒரு பேட்டியில் சொன்னது, "என்னுடைய பிள்ளைகளுக்கு நானாக இன்ஃபோசிஸில் வேலை தரப்போவதில்லை. அவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு முறைப்படி எங்கள் நிறுவனத்தின் செயல்முறைகளைப் பின்பற்றித் தங்களுக்கான பதவியைப் பெறவேண்டும்" என்றார்.

ஆகவே, நீங்கள் உங்களுக்கான படிப்பை எப்படித் தேர்வு செய்யவேண்டுமென்றால், நான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இதற்குத் தேவையான சிறப்புத் திறமைகளும், இந்தத் துறையில் ஆர்வமும் எனக்குள்ளது. என்னால் இந்தத் துறையில் மிகச் சிறப்பாகச் செயல்படமுடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. ஆகவே, ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் கீழ்க்கண்ட கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். அதற்குத் திருப்தியான பதில் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இறுதியாக, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள படிப்பைப்பற்றி முழுமையாகப் அறிந்துள்ளீகளா?

இந்தப் படிப்புக்குத் தேவையான செலவுகள், கல்விக்கடன், உதவித்தொகை போன்றவற்றைப்பற்றித் தெரிந்து கொண்டீர்களா?

உங்களுடைய பின்னணிக்கு இது எந்த அளவு பொருந்தும் என்று யோசித்துவிட்டீர்களா? இதற்கான படிப்புச் செலவுகளைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

இந்தத் துறை உங்களுடைய தனிப்பட்ட மற்றும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வேலையைக் கொடுக்குமா?

உதாரணமாக, உங்களுக்கு இசையில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதில் உச்சத்தை எட்டுவது மிகவும் சிரமம். அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆகவே, இப்போதே முடிவுசெய்துகொள்ளுங்கள். இந்த ஆர்வத்துக்காக குடும்பத்திற்கான வருமானத்தைப் பணயமாக வைக்க உங்களால் முடியுமா? வேண்டுமானால் நீங்கள் இதைப் பொழுதுபோக்காக ஏற்றுக்கொள்ளலாம். பிறகு ஒரு வேலையில் சேர்ந்துகொண்டு இசைப்பணிகளில் ஆர்வம் செலுத்தலாம்.

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை!

இந்தப் படிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்? அதன்பிறகு என்னவெல்லாம் படிக்கவேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

M.B.B.S-ஐ பொறுத்தவரை நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுவரை மேல்படிப்புக்குச் செல்லவேண்டும். அதற்குப் பத்து வருடங்கள்வரை ஆகலாம். இந்தப் படிப்பை முடித்தபிறகு உங்கள் பணி வாழ்க்கை உறுதிப்பட மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உதாரணமாக, சட்டப்படிப்பை எடுத்துக்கொண்டால், அதைப் படித்து முடித்தவர்கள் இன்னொரு பெரிய வழக்கறிஞர் அல்லது நிறுவனத்தின்கீழ் பணிபுரிந்து பயிற்சி பெறவேண்டும். அதன்பிறகுதான் அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யமுடியும். உங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். உங்கள் குடும்ப சூழ்நிலை உங்கள் வருமானத்தை நம்பி இல்லாமல் இருந்தால் நீங்கள் வேலை குறித்து அவசரம் இல்லாமல் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி போன்ற முழுமையான படிப்பை தேர்ந்தெடுக்கலாம்.

இந்தத் துறையில் உள்ள தொழிற்சார்ந்த விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா?
அவை உங்களுடைய இயல்புடன் பொருந்திப்போகிறதா என்று யோசித்துக்கொண்டீர்களா?

உதாரணமாக, நீங்கள் எப்போதும் வீட்டில் இருப்பதையே விரும்புகிறவர் என்றால், Marine Engineering படிப்பு / வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை நீங்கள் வருங்காலத்தில் உங்களுடைய தந்தை/குடும்பத் தொழிலைச் செய்யலாம் என்று முடிவுசெய்திருந்தால் இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் படிப்பு அப்போது உங்களுக்கு உதவியாக இருக்குமா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.



ஒருவேளை உங்களுடைய நிலைமை இப்படி இருந்தால்! நான் இன்னும் என்னுடைய படிப்பைத் தேர்வு செய்யவில்லை எதைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் பெற்றோர் என்னை ஒரு படிப்பில் சேர்ப்பார்கள். எனக்கு எது தேவை என்று அவர்களுக்குத் தெரியும் என்று கருதினால் அதை மகிழ்ச்சியாக ஏற்றுகொள்ளுங்கள். ஒவ்வொருவரும் சில சிறப்புத் திறமைகளோடுதான் பிறக்கிறார்கள். உங்களுடைய சிறப்புத் திறன்கள் என்னென்ன என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த ஆர்வத்தை நீங்கள் தேடத் தொடங்கலாம். அது கிடைக்கும்வரை நிறுத்தாதீர்கள். இப்போதைக்கு உங்களுக்கு நல்ல வழிகாட்டக்கூடியவர்களை அடையாளம் காணுங்கள்! பின்பற்றுங்கள்!!

எஸ்.முத்துகிருஷ்ணன்
பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை! பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை! Reviewed by Rajarajan on 15.6.20 Rating: 5

கருத்துகள் இல்லை