TET தேர்வு தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப் பொருந்தாது - மேலும் சில விளக்கங்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), 2010 செப்டம்பர் 23 ஆம் நாளுக்கு முன்னரே பணி நியமனம் பெற்றவர்கள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப் பொருந்தாது - மேலும் சில விளக்கங்கள்.
--------------------------------
1. கல்வி உரிமைச் சட்டம் 2009, ஏப்ரல் 1 2010 ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டது.
2. கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் உள்ள விதிமுறையின் அடிப்படையில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் புதிதாக ஆசிரியர் நியமனத்துக்கான குறைந்தபட்ச தகுதிகளை வரையறுத்து 2010 ஆகஸ்ட் 23 இல் புதிய அறிவிப்பாணை வெளியிட்டது.
3. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட 2010 ஆகஸ்ட் 23 நாளைய அறிவிப்பாணைக்குப் பிறகு நடைபெறும் நேரடி ஆசிரியர் நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
4. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிப்பாணை வெளியிடும் நாளுக்கு முன்னரே ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. அதேசமயம் அறிவிப்பாணைக்கு முன்னரே அதாவது 2010 ஆகஸ்ட் 23 ஆம் நாளுக்கு முன்னரே ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் 2001 செப்டம்பர் 3 இல் வெளியிட்ட அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்சக் கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
5. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 2010 இல் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு முன்னரே ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் பலர் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 2001 இல் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெறாதவர்களாக இருந்தனர். இதைக் கவனத்தில் கொண்டு 2017 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதாவது முறையான ஆசிரியர் கல்வித் தகுதி பெறாமல் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 2019 ஆம் ஆண்டுக்குள் முறையான ஆசிரியர் கல்வித் தகுதியை பெற வேண்டும் என்று கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
6. ஆசிரியர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதி தொடர்பான கல்வி உரிமைச் சட்டம் திருத்தம் 2017 க்கும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் மூலம் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் தொடர்பு இல்லை என்பதை சட்ட திருத்த ஆவணத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
7. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 2010 ஆகஸ்ட் 23 ஆம் நாளன்று வெளியிட்ட அறிவிப்பாணையில் இடம்பெற்றுள்ள பத்திகள் 4 மற்றும் 5 இல் இவ்வறிவிப்பாணைக்கு முன்னரே பணியில் சேர்ந்தவர்கள் 2001 செப்டம்பர் 3 ஆம் நாளன்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்ட கல்வித் தகுதியை பெற்றிருந்தால் போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை வழக்கு தொடுத்தவர்களும் நீதிமன்றமும் தமிழ்நாடு அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.
8. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 2010 ஆகஸ்ட் 23 இல் வெளியிட்ட அறிவிப்பாணையின் பத்திகள் 4 மற்றும் 5 இல் கூறப்பட்டுள்ளதையும் 2017 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்ட திருத்தம் குறித்தும் சரியாகப் புரிந்து கொண்டால் 2010 ஆகஸ்ட் 23 ஆம் நாளுக்கு முன்னரே தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 2001 இல் வெளியிட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியோடு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் பணியில் நீடிக்கவும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்வும் ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
கருத்துகள் இல்லை