சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வரும் 2022-ஆம் ஆண்டு வரை தாய்மொழிகளில் எழுதிக்கொள்ள அனுமதி
சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாடத் தேர்வை தமிழுக்குப் பதிலாக தங்களது தாய்மொழியில் எழுத அனுமதியளித்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் முதல் மொழிப்பாடமாக தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழுக்குப் பதிலாக தங்களது தாய்மொழியான உருது, கன்னடம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழிப்பாடத் தேர்வை எழுத அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த ஆண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், அப்துல் குத்தூஸ், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வரும் 2022-ஆம் ஆண்டு வரை தமிழ் பாடத்துக்குப் பதிலாக அவரவர் தாய்மொழிகளில் எழுதிக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வரும் 2022-ஆம் ஆண்டு வரை தாய்மொழிகளில் எழுதிக்கொள்ள அனுமதி
Reviewed by Rajarajan
on
24.9.19
Rating:
கருத்துகள் இல்லை