குரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளின் நடைமுறை மற்றும் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளன.
சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட நேர்காணல் பணியிடங்கள் முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்ட தேர்வுகளைக் கொண்ட குரூப் 2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டன. பல்வேறு துறைகளின் உதவியாளர் உள்ளிட்ட நேர்காணல் அல்லாத பணியிடங்கள் ஒரு எழுத்துத் தேர்வைக் கொண்ட குரூப் 2ஏ தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், புதிய முறைப்படி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ என இரு தேர்வுகள் அல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும். இதுவரை ஒரு தேர்வு மட்டும் இருந்த நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கு, பிரதான தேர்வையும் சேர்த்து இருநிலை தேர்வுகளை எழுத வேண்டும்.
குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வில் இதுவரை 100 பொது அறிவு வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து எழுதும் 100 வினாக்களும் கேட்கப்பட்டன. அந்த முறை மாற்றப்பட்டு தமிழக அரசியல் வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்ட பாடப்பகுதிகளுடன் கூடிய 175 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி வினாக்களும் இடம்பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. பொது அறிவு சார்ந்த வினாக்கள் முதல்நிலைத் தேர்வில் அதிகரிக்கப்பட்டு மொழி சார்ந்த வினாக்கள் பிரதானத் தேர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
திறன்வாய்ந்த பணியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதனால் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..?
Reviewed by Rajarajan
on
29.9.19
Rating:
கருத்துகள் இல்லை