ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வெளியில் கசியாது'- இயற்கையைக் காக்கும் மூங்கில் பாட்டில்கள்
பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த உலகம் இப்போது அதன் பயன்பாட்டைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறது.
கல்லூரிக்கு, வேலைக்கு என பல இடங்களுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கான மாற்று என்ன என்று சிந்தித்த திரித்மன் போரா என்பவரின் செயல் வடிவம்தான் இந்த மூங்கில் தண்ணீர் பாட்டில்.
அஸ்ஸாமைச் சேர்ந்த 36 வயது தொழிலதிபரான திரித்மன் போரா ஐஐடி-யின் முன்னாள் மாணவர். இயற்கையைக் காக்கும் வகையில் இந்த மூங்கில் பாட்டில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பாட்டில்களைச் சரியாக உருவாக்க அவருக்கு 17 வருடங்கள் ஆகியிருக்கிறது.
மூங்கிலால் செய்யப்பட்டதால் தண்ணீர் வெளியில் கசியுமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் பாட்டில்கள் 100 சதவிகிதம் leak proof தன்மையைக் கொண்டவை. எனவே, தயக்கமின்றி வெளியில் எடுத்துச்செல்ல முடியும். மூங்கில் தன்னுடைய இயல்பால் கிருமிகளை வளரவிடாது. இதை பராமரிப்பதும் எளிது.
பாட்டிலைத் தயாரிக்க பலூக்கா(Bhaluka) என்ற மூங்கில் வகையை உபயோகிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் 100 முதல் 150 பலுக்கா மூங்கில்களைப் பயன்படுத்தி 1500 பாட்டில்கள் வரை உருவாக்கப்படுகிறது.
மூங்கில் பாட்டில்கள் உடலுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் அது நன்மை செய்பவை. இதில் தண்ணீரை குளிர்ச்சியாகவும் சுத்தமான முறையிலும் சேமிக்க முடியும். `புவி வெப்பமயமாதலும் பருவநிலை மாற்றத்தாலும், நாம் பல இன்னல்களைச் சந்தித்துவருகின்றோம், இதிலிருந்து பூமியை பாதுகாக்க, நான் செய்த சிறிய முயற்சிதான் இந்த மூங்கில் குடுவைகள்' என்கிறார் திரித்மன் போரா. இந்த மூங்கில் பாட்டில்கள் ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகின்றன
ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வெளியில் கசியாது'- இயற்கையைக் காக்கும் மூங்கில் பாட்டில்கள்
Reviewed by Rajarajan
on
15.9.19
Rating:
கருத்துகள் இல்லை