முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?தொடர் மதிப்பீட்டு முறை என்ற,CCE நீக்கமா???
'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், ஏற்கனவே உள்ள, முப்பருவ பாடமுறை ரத்து செய்யப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில், வழக்கமான தேர்வு நடத்த வேண்டும். தேர்வு நடத்துவது தொடர்பாக, மாநில அரசுகள் சுயமாக முடிவு எடுக்க லாம் என, இந்த ஆண்டு மார்ச்சில், மத்திய அரசு உத்தரவிட்டது. இதை பின்பற்றி, நடப்பு கல்வி ஆண்டு முதல், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. குழப்பம்இதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார். சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற, மத்திய கல்வி வாரியங்கள், இன்னும் முடிவெடுக்காத நிலையில், தமிழக அரசு முந்திக் கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த அறிவிப்பால், பல்வேறு நடைமுறை குழப்பங்களும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. தற்போதைய நடைமுறைப்படி, ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையிலும், முப்பருவ பாடமுறை அமலில் உள்ளது.இதன்படி, மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வு, இரண்டாம் பருவ தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பருவ தேர்வுக்கும் பாட வாரியாக, தனியாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. முதல் பருவ தேர்வு முடிந்ததும், அந்த பாட புத்தகங்களை பயன்படுத்துவதில்லை.அடுத்த பருவ தேர்வில், முதல் பருவ தேர்வுக்கான பாடங்களில் இருந்து, கேள்விகளும் இடம் பெறாது. இரண்டாம் பருவ தேர்வுக்கு, தனியாகவும், மூன்றாம் பருவ தேர்வுக்கு, தனியாகவும் புத்த கங்கள் வழங்கப்படும். அந்தந்த பருவ தேர்வுக்கு, அந்தந்த பாடப் புத்தங்களை மட்டுமே படிக்க வேண்டும். முந்தைய பருவ பாடங்களை படிக்க தேவையில்லை.
அபாயம்
இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்ததால், மாணவர்கள், ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் மொத்த பாடங்களையும் படித்தாக வேண்டும்.அப்படியென்றால், முதல் பருவ பாடங்களை, இரண்டாம் பருவத்துக்கும், முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடங்களை, மூன்றாம் பருவ தேர்வுக்கும் சேர்த்து படிக்க வேண்டியதிருக்கும். இதனால், மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதுடன், புத்தக சுமையும் அதிகரிக்கும். மேலும், பொது தேர்வு முறை அமலானால், முப்பருவ பாட முறையை, ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொடர் மதிப்பீட்டு முறை என்ற, சி.சி.இ.,நீக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஓராண்டு பாடங்கள் அனைத்தையும், மாணவர்கள் படிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு கூடுதல் வேலை நாட்களும், நேரமும் தேவைப்படும். எனவே, சி.சி.இ., முறைக்கு தேவையான, பாடம் தொடர்பான இணை செயல்பாடுகளில், மாணவர்களால் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். அதேபோல், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, தொடர்ந்து அடிப்படை கல்வி கிடைப்பதிலும், சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?தொடர் மதிப்பீட்டு முறை என்ற,CCE நீக்கமா???
Reviewed by Rajarajan
on
15.9.19
Rating:
கருத்துகள் இல்லை