Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாந்தோப்பில் பணியாற்றியது முதல் இஸ்ரோ தலைவர் வரை..! சிவன் கடந்து வந்த பாதை

Image result for SIVAN
மாந்தோப்பில் பணியாற்றி, கல்லூரி செல்லும் வரை காலணியே அணியாதவராக, விவசாயியின் மகனாக வாழ்ந்த தமிழர் சிவன், இஸ்ரோவின் தலைவராக உயர்ந்து, இதுவரை எந்த நாடும் தரையிறக்காத நிலவின் தென் துருவத்திற்கு ஆய்வூர்தியை அனுப்பிய பெருமையை பெற்றுள்ளார். 

1957-ம் ஆண்டு தமிழகத்தின் கன்னியாகுமரியில் பிறந்த சிவன், மேலசரக்கல்விளை கிராமத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர். மாந்தோப்பு வைத்திருந்த தந்தைக்கு உதவியாக விடுமுறை நாட்களில் பணியாற்றி, ஆட்கூலியை மிச்சப்படுத்தி வாழ்ந்தவர்.

தோட்ட வேளையில் தன் தந்தைக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்பதற்காகவே அருகில் உள்ள தென் திருவாங்கூர் இந்து கல்லூரியில் சேர்ந்தார். பொறியியல் படிப்பதைக் கனவாகக் கொண்டிருந்த சிவன், பி.எஸ்.சி. மட்டுமே படிக்க வைக்க முடியும் என தந்தை கூறியதால் மனமுடைந்து ஒரு வாரம் வீட்டில் பட்டினிப் போராட்டம் நடத்தியதாகவும், பின், குடும்ப சூழலை உணர்ந்து பி.எஸ்.சி. யே படித்ததாகவும் கூறியுள்ளார்.



கல்லூரி செல்லும் வரை காலில் செருப்பு கூட அணியாத ஒரு வாழ்க்கை. பேன்ட் இல்லாததால் பெரும்பாலும் வேட்டியிலேயே மாணவப் பருவம் கழிந்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தன் தந்தை ஒரு நாளும் தங்களை பட்டினி போட்டதில்லை என்றும், வயிறாற 3 வேளை உணவு வழங்குமளவு வசதியோடு தன்னை வளர்த்ததாகவும் கூறியுள்ளார்.

இளங்கலை முடித்ததும் தந்தை சிவனை அழைத்து, அவரது பொறியியல் கனவை சிதைத்ததை எண்ணி வருத்தப்பட்டதாகவும், பின் தன் தோட்டத்தை விற்று சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்க வைத்ததாகவும் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

அதையடுத்து பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்.இ-யில் (IISc) ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் துறையில் மேற்படிப்பு முடித்தார். பல்வேறு பணி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட நிலையில் 1982-ல் இஸ்ரோவில் ராக்கெட் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணியில் சேர்ந்தார்.

அதன்பின் மும்பை ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றார். பின் படிப்படியாக கடின உழைப்பால் பதவி உயர்வு பெற்ற சிவன், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராகவும் பணியாற்றினார்.

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்ற சிவனின் தலைமையின் கீழ், உலகில் எந்த நாடும் ஆய்வூர்தி அனுப்பிடாத நிலவின் தென்துருவத்துக்கு சந்திராயன் 2-ஐ கடந்த ஜூலை 22-ம் தேதி அனுப்பினார்.



2 புள்ளி 1 கிலோ மீட்டரே இருக்கும் போது விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்ததால், நொறுங்கிப் போன சிவன், பிரதமர் தோளில் முகம் புதைத்து கலங்கியது விண்வெளித்துறையின் மீது அவருக்கு இருந்த அளவில்லா காதலை வெளிப்படுத்தியது.
மாந்தோப்பில் பணியாற்றியது முதல் இஸ்ரோ தலைவர் வரை..! சிவன் கடந்து வந்த பாதை மாந்தோப்பில் பணியாற்றியது முதல் இஸ்ரோ தலைவர் வரை..! சிவன் கடந்து வந்த பாதை Reviewed by Rajarajan on 8.9.19 Rating: 5

கருத்துகள் இல்லை