ஆசிரியர்கள் நிர்வாக இடமாறுதல் ரத்து - பள்ளிக்கல்வி கமிஷனர்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிர்வாக இடமாறுதல் வழங்கும் முடிவை, பள்ளிக் கல்வி கமிஷனர் ரத்து செய்துள்ளார். இதனால், அரசியல்வாதிகள் வழியே வரும் கடிதங்கள், குப்பைக்குப் போகும் என தெரிகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் 'கவுன்சிலிங்' நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் 'ஆன்லைன்' முறையில், கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்டது. தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மலை சுழற்சி பணியிடங்கள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடத்த வேண்டியுள்ளது.
இதுகுறித்து, நீதிமன்ற வழக்கு முடிந்ததும் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கவுன்சிலிங் முடிந்த பின் காலியாக உள்ள இடங்கள், நேற்று முன்தினம் ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற இடங்கள் ஆகியவற்றில், நிர்வாக இடமாறுதல் வழங்குமாறு, ஏராளமான ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர், தி.மு.க., மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் வழியே பள்ளிக்கல்வி அமைச்சகத்துக்கு மனு அளித்து உள்ளனர். இதுதவிர பல்வேறு சங்க நிர்வாகிகளும் இடம் மாற விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.ஆனால், கவுன்சிலிங் இல்லாமல் நிர்வாக இடமாறுதல் வழங்கக் கூடாது என, முதல்வர் அலுவலகத்தில் இருந்து, பள்ளிக்கல்வி துறைக்கு கண்டிப்பான உத்தரவு வந்துள்ளது.முதல்வரின் முதன்மைச் செயலர் உதயசந்திரனின் பொறுப்பில், பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.
எனவே, 'என் கண்காணிப்பில் உள்ள துறையில் தேவையற்ற விதிமீறல் புகார்கள் வந்து விடக்கூடாது' என, பள்ளிக்கல்வி கமிஷனருக்கு அவர், அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.இதன் காரணமாக, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார், நிர்வாக இடமாறுதல் வழங்கும் முடிவை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
கமிஷனரின் அனுமதியின்றி, நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில், மாநில அளவிலோ, சி.இ.ஓ.,க்களின் வழியே மாவட்ட அளவிலோ இடமாறுதல் அளிக்கக் கூடாது என, பள்ளிக் கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர், மேல்நிலை கல்வி இணைய இயக்குனர் ஆகியோருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால், அரசியல்வாதிகள் அளித்துள்ள சிபாரிசு கடிதங்கள் குப்பை கூடைக்கு செல்லும் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை