வாத்தியார் குரல் -வாத்தியார் பொழப்பு வாழ்க்கையில் இழப்பு...!
வாத்தியாரு வேலதான்
வசதின்னு பேசுறாக...
உக்காந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...
பசங்க மனசெல்லாம்
பாழடைஞ்சு கெடக்குது
சொல்லிக்கொடுத்த
வாத்தி மனசோ
சுக்கு நூறாக்கெடக்குது .
காலையில பள்ளியில
கால் வெச்சு போகையில...
டிக் டிக் டிக் மணியடிக்க
திக் திக்குன்னு மனசடிக்குது.
பசங்க முடியெல்லாம்
பக்காவா இருக்கனுமாம்
பக்குவமா சொன்னாலும் மனசு
பக்கு பக்குனு அடிக்குது
பசங்க ஏதாச்சும்
பண்ணிடப் போரான்னு
துடிக்குது...
படிக்கச்சொன்னாலே
பசங்க
துடிச்சு போற காலமிது...
படிக்க வெக்கத்தான்
வாத்தியாரு வேலையிது..
கண்டிக்கவும் கூடாது
கட்டளையும் கூடாது
திட்டவும் கூடாது
குட்டவும் கூடாது
மார்க்கு மட்டும்
மலை போல
கொட்டனுமாம்..
ஆதாரு இருக்கான்னு
அக்கறையா கேக்கனுமாம்
அக்கவுண்டு நம்பரை
அட்ரசோட
வாங்கணுமாம்...
சீருடை இல்லைன்னா
சிரிச்சிக்கிட்டே
கேக்கனுமாம்...
அடிச்சி கிடிச்சு
போட்டாக்க
அம்புட்டுதான் வாழ்க்க...
கழியத்தொட்டதுக்கு
களிதானே வாழ்க்க...
பசங்க
கேலிப்பேச்சு
பேசினாலும்
கேக்கத்தான் வேணும்...
கத்தியாலக்குத்தினாலும்
வாங்கத்தான் வேணும்..
போசாக்கு இல்லாத
பையனையும்
பாசாக்க
வெக்கனுமாம்
பாவப்பட்ட ஜென்மம் அது
வாத்தியாரு பொழப்பிது ..
நரக வாழ்க்கையிது
நல்லபடி
நகரா வாழ்க்கையிது...
இயல்பான
ரத்த அழுத்தம்
ரெண்டு மடங்கு ஏறுது..
துடிக்கிற இதயமோ
எப்போதான்
நிற்குமோ !?
அச்சமில்லை அச்சமில்லை
சொல்லி கொடுத்த
வாத்தியாரு
சொன்னதுமே
நடுங்குறாரு..
சாக்பீசு
தேயுமுன்னே
வாத்தியாரு
தேயுராரு...
ஒத்த இதயத்த
பிளந்தெடுக்க
எத்தனை அம்புகதான்
கிளம்பி வருமோ?
பெத்தவங்க
ஒருபக்கம்
மத்தவங்க
மறுபக்கம்.
சமூகம்
ஒருபக்கம்
சங்கடங்கள்
மறுபக்கம்
அம்புகள
தொடுத்து நின்னா
அப்பாவி வாத்தியாரு
என்னதான்
பண்ணுவாரு...
வாத்தியாரை
மதிக்கும்
வசந்த காலம் போச்சு
வாத்தியாரை
மிதிக்கும்
கலி காலம் ஆச்சு...
இப்பதெல்லாம்
நெறைய வாத்தியார்கள்
கரும்பலகையை
கையால் துடைப்பதில்லை
கண்ணீரால்
துடைக்கிறார்கள்.
சாக்பீஸ்
துகள்களால்
நுரையீரலை
அடைக்கிறார்கள்..
வாத்தியாரு வேலதான்
வசதியின்னு பேசுறாக...
உக்கந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...
அவங்களிடம்
சொல்லுங்க...
" வாத்தியார் பொழப்பு
வாழ்க்கையில் இழப்பு "
என்று....
வாத்தியார் குரல் -வாத்தியார் பொழப்பு வாழ்க்கையில் இழப்பு...!
Reviewed by Rajarajan
on
8.8.19
Rating:
*வாத்தியார் குரல்*
பதிலளிநீக்குவசதிக்கு ஆயிரம் வேல கெடக்கு
புள்ளைக ஒசத்திக்கு பாடுபட வேண்டிய கடமை வாத்தியாருக்கு நெறய இருக்கு
காந்தியே பொறந்தாலும் ஊர் பூரா புகழாது
குறையேதும் இல்லாம தங்கம் கூட மிளிராது
ஆமா
பசங்க மனசெல்லாம் பாழடஞ்சி தான் கெடக்குது
ஆசு இரியன் தானே
ஆசிரியன்?
பாழ்பட்ட மனச பக்குவமாக்கு
பலமா மாத்து
கொஞ்சம் ஒசரத்துல ஏத்து
உன்ன நம்பிதானே அந்த சிறுபிள்ள நாத்து
மணிக்காக செய்யுற வேலையா இது
மனிதனுக்காக செய்யுற வேல
இப்படி நெனச்சி பாடம் சொன்னா கரடுமொறடும் கண்ணுக்குட்டியா கெடக்கும்
அன்ப வெதைக்காம
அதிகாரம் தூக்கி வந்தா
அடங்கதான் மறுக்கும்
அவனுக்குள்ளயும் குட்டிரோஷமும் கொஞ்சம் இருக்கும்
கண்டிக்க
தண்டிக்க
திட்டித்தீர்க்க
குட்டு வைக்கவா வாத்தியாரு வேல?
இந்த இலக்கணம் இல்லாம இனிக்கனும் வகுப்பறை
ஐயா பெரியவங்களே உங்களால
துளிர்க்கனும் நல்தலைமுறை
அக்கறையா கேட்டா
அன்பாவே குழஞ்சிக் கெடப்பான்
குட்டி குட்டி குட்டிச்சுவராக்காம
பரிவோட தட்டி கொடுத்தா தடம்பதிக்க மாட்டானோ?
நல்ல புத்தியால
சொல்லித்தர
கத்தியால குத்தேன் விழுது?
போசாக்கு இல்லாத பையனையும் பாசாக்குறவுக தானே
நல்ல வாத்தியாரு
முடியாதுனு சொல்ல எல்லாராலும் முடியும்
முடியும்னு மனச வைங்க
பிள்ளைங்க நெஞ்சுல அன்ப தைங்க
களிமண்ணே படுறவுக கைபட்டா சாமி செலையா மாறும் போது
பிஞ்சு உள்ளங்கள எதனா சொல்லி பிச்சி எறியாதீங்க
பெத்தவங்க
மத்தவங்க
சமூகம் னு
இன்னும் நம்புறாங்க உங்கள
சாக்பீசா தேயுறோம்னு சங்கடப்படுறீங்களே
அதாங்க வெளங்கல
வாத்தியாரு பொழப்பு
வாழ்க்கையில் இழப்பு
இந்த பொருந்தாத கண்ணாடிய தூர வீசி
தலைமுறை வளர்த்தெடுக்க தாங்க பழகுங்க
விமர்சனங்கள் இல்லாம வாழ்வது அரிது
நம்மால் நாலெழுத்து பிறர் படிக்க வாய்த்த இப்பணி வாழ்க்கையில் மிகப்பெரிது
கம்புகளையும் கட்டளைகளையும் பரணில் ஏற்றிவிட்டு
புன்னைகையோடும் புதுமலர்ச்சியோடும் புறப்படுங்கள் வகுப்பறைக்கு..
மழலைகள் மலர்க்கொத்தோடு காத்துக்கிடக்கும்
������������
*சீனி.தனஞ்செழியன்*