குரூப்-2 தேர்விலும் முறைகேடு? நடவடிக்கை எடுக்க TNPSC முடிவு
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அரசுப் பணியில் இருப்பதால் அவர்கள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வைத் தொடர்ந்து குரூப் 2A தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
2017-ம் ஆண்டு 1,953 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரையில் இருக்கக்கூடிய 9 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி 37 பேர் மாநில அளவில் முதல் 50 இடங்களுக்குள் தேர்வாகி உள்ளனர்.
2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வை மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.
மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுதி மாநில அளவில் முதல் 50 பேர் தேர்வு பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2017-ல் வெளியான தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு அவர்கள் ஓராண்டு பணியாற்றி, அதற்கான ஊதியத்தையும் பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
திருக்குமரனுடன் கைது செய்யப்பட்டுள்ள நிதீஷ்குமாரும் 2017-ம் ஆண்டில் குரூப் 2 ஏ தேர்வை முறைகேடான வழியில் எழுதி தேர்ச்சி பெற்று தற்போது அரசுப் பணியில் உள்ளார்.
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்க இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாததால், முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ஆனால் குரூப் 2ஏ தேர்வில் வெற்றிபெற்றவர்கள் பல்வேறு இடங்களில் பணிக்கு சேர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கிடையாது.
இதனால், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குருப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீதும் விசாரணை தொடங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
குரூப்-2 தேர்விலும் முறைகேடு? நடவடிக்கை எடுக்க TNPSC முடிவு
Reviewed by Rajarajan
on
28.1.20
Rating:
கருத்துகள் இல்லை