தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு
இந்தியாவின் குடியுரிமை ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து அந்த மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது 17 வயது நிரம்பியவர்களும் முன்கூட்டியே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் எண்ணுடன் இந்த வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் – ஆதார் இணைப்பு பணிகள் தொடங்கி உள்ளது. ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் எஸ்எம்எஸ் மூலமாகவும்,நேரடி முறையிலும் வாக்காளர் – ஆதார் இணைப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது.
அதனால் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும் அதற்கான உதவிகளை செய்யவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு ஆதார் – வாக்காளர் இணைப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் செப்.4ம் தேதி அன்று தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள் தங்கள் சுய விருப்பத்துடன் முன் வந்து ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இலவசமாக இணைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பொதுமக்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளில் இந்த முகமானது வருகிற 4ம் தேதி நடைபெற உள்ளது. பல மாவட்டங்களில் மக்களை ஊக்குவிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 பேருக்கு இ-சர்டிபிகேட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை