பயின்ற பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றிய சகோதரர்கள்
சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இந்த பள்ளி கடந்த 1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிக பழமைவாய்ந்த அரசுப்பள்ளியாகும். இப்பள்ளியில் கீழடி, பசியாபுரம், காமராசர் காலனி, பள்ளிசந்தை புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்பு பயின்று வந்துள்ளனா்.
காலப்போக்கில் அரசு பள்ளிகளின் முறையான பரமரிப்பு இன்றி சுகாதரமின்றி, பழுதடைந்து வந்துள்ளது. இதன் காரணமாகவும், தனியார் பள்ளிகளின் உள்ள மோகத்தாலும் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. கடந்த ஆண்டு 180 மாணவர்களே படித்தனர்.
இதையறிந்த கீழடி முன்னாள் ஊராட்சித் தலைவர் வெங்கடசுப்ரமணியன் தனது சகோதரர் மருத்துவர் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்ற முடிவு செய்தார்.
அதன்படி பள்ளிக் கட்டிடங்களை மராமத்து செய்து, டைல்ஸ் பதித்து புதுப்பித்தனர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான இருக்கை, சுத்தமான கழிவறை, சுகாதாரத்தை பேணும் வகையில் குப்பைகள் உள்பட பல்வேறு வசதிகளை கொடுத்துள்ளனர்.
மேலும் நான்கு கட்டிடங்களிலும் ஸ்மார்ட் வகுப்பு தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக ரூ.15 லட்சம் செலவு செய்தனர். இதனால் நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வெங்கடசுப் ரமணியன் கூறியதாவது:நான் இந்தப் பள்ளியில் தான் படித்தேன். அப்போது மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.வசதிக்காக பலர் தனியார் பள்ளியை நாடுவதாக அறிந்தேன். இதையடுத்து சகோதரர் பன்னீர்செல்வமும், நானும் சேர்ந்து இப்பள்ளியை தரம் உயர்த்தினோம்.
தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். இது எங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.எனது சகோதரர் பன்னீர்செல்வம் ஈரோட்டில் கண் மருத்துவராக உள்ளார்.
அவர் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று கீழடியில் இலவசக் கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்.
அடுத்ததாக, அரசு மேல்நிலைப் பள்ளியையும் மேம்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.கீழடி பள்ளியை மேம்படுத்தியதைப் பார்த்து பக்கத்து கிராம மக்களும் தங்களது பள்ளியை சீர்செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வோம் என்றார்.
பயின்ற பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றிய சகோதரர்கள்
Reviewed by Rajarajan
on
8.6.19
Rating:
கருத்துகள் இல்லை