இடமாறுதலை அரசு ஊழியர்கள் ஒரு போதும் உரிமையாக கோர முடியாது' என, உயர்நீதிமன்ற
இடமாறுதலை அரசு ஊழியர்கள் ஒரு போதும் உரிமையாக கோர முடியாது' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர், இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தரவு:இடமாறுதல் என்பது பணி நிபந்தனைகளில் ஒன்று. இடமாறுதலை அரசு ஊழியர்களால் ஒரு போதும் உரிமையாக கோர முடியாது.
பொது நலன் கருதி, பணியாளரை இடமாற்றம் செய்வது, திறமையான மற்றும் பயனுள்ள நிர்வாகத்தை உறுதி செய்வது பொது நிர்வாகத்தின் தனிச் சிறப்பு. அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலந்தாய்வு கொள்கையானது, அரசு ஊழியர்களுக்கான சலுகையாகும். விதிமுறைகள், நிபந்தனைகளின் படி, தகுதிக்குட்பட்டு இடம் அல்லது பதவியை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, ஒரு சலுகையை உரிமையாக கோர முடியாது. கலந்தாய்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் தகுதிகளை சரிபார்த்து, அதற்கேற்ப உரிய முடிவு எடுப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
பொது இடமாறுதல் கலந்தாய்வை பொறுத்தவரை, மறு ஆய்வு செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் குறைவு. அதில், நீதிமன்றங்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை. அரசு துறைகளின் அன்றாட நிர்வாகத்தில் உயர்நீதிமன்றங்கள் தலையிட முடியாது.அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கொள்கை முடிவில், ஏதேனும் விதிமீறல் இருந்தால், பாதிக்கப்பட்ட நபர் சட்டத்திற்குட்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுக வேண்டும்.இவ்வழக்கில் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ளதாக மனுதாரர் கூறுகிறார். அதை நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது.
தற்போதைய இடத்தில் ஓராண்டு பணியை நிறைவு செய்துள்ளதாக மனுதாரர் கூறுகிறார்.மனுதாரரின் பணி பதிவேட்டைச் சரிபார்த்து, அதிகாரிகள் தகுந்த முடிவெடுக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை