Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மிரட்டும் பாடச்சுமை , கலை பிரிவில் ஆர்வம் காட்டும் முதல் மதிப்பெண் மாணவர்கள், ஏன்..? எதனால்..?


20 ஆண்டுக்கு முன் பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ மாணவியரின் ஒரே தேர்வு ஃபர்ஸ்ட் குரூப்தான். இதைச் சொல்லும்போதே ஒரு பெருமிதம் இருக்கும். கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் எனத் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு அடுத்து கணினி அறிவியல், கணிதம் தவிர்த்த அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுப்பார்கள். மதிப்பெண் 380-க்கு கீழ் இருப்போர்தான் கலைப்பிரிவும் தொழிற் பிரிவும் தேர்ந்தெடுப்பார்கள்.

ஃபர்ஸ்ட் குரூப் எடுத்து படிக்கும்போது ஓயாமல் படிப்பும், ரெக்கார்ட் வொர்க்கும் இருந்துகொண்டே இருக்கும் என்னும் பயம் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.
Was

இதனிடையே பாடத்திட்டங்கள் மாற மாற மாநில அளவில் முதலிடம் பிடிக்க ஆரம்பித்தனர் கலைப்பிரிவு மாணவ மாணவியர்.

சற்றே எளிய பாடங்கள், திட்டமிட்டு படித்தால் இருபாடம் சென்டம், மதிப்பெண்ணும் 1150-க்கு மேல் என இவர்களின் கிராப் சமூகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தது. அனைவரின் பார்வையும் ஆர்ட்ஸ் குரூப் பக்கம் பட ஆரம்பித்தது. விளைவு பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடிப்பவர்கூட ஆடிட்டர் ஆவேன் எனக்கூறி ஆர்ட்ஸ் குருப்புக்கு பிள்ளையார் சுழி போட ஆரம்பித்தனர்.

மிரட்டும் பாடச்சுமை
தற்போதைய மேல்நிலை பாடத்திட்டம் கல்லூரி இளங்கலை பாடத்திட்டத்தின் முதலாண்டு பாடத்தரத்துக்கு சமமானது.

பதினொன்றாம் வகுப்பு புதிய பாடத்தின்படி தமிழ்வழி மற்றும் (ஆங்கில வழி)யில் இயற்பியல்-656 (648), வேதியியல் 672 (624), தாவரவியல் 608 (560), விலங்கியல் 472 (440), கணிதம் 672 (608) பக்கங்கள் உள்ளன.


பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல் 664 (656), வேதியியல் 672 (614), தாவரவியல் 285 (320), விலங்கியல் 387 (280) என ஒவ்வொரு பாடமும் 500-க்கும் மேற்பட்ட பக்கங்கள் இன்றைய மாணவர்களைப் பயமுறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் முடித்தால்தான் திருப்புதல், சுழற்சி தேர்வுகளுக்கு தயார்படுத்த முடியும்.

ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க வேண்டியதை ஆசிரியர்கள் 7 மாதத்தில் முடித்து மாணவர்களைப் படிக்க வைக்க வேண்டும். ப்ளூ பிரின்ட் எல்லாம் இல்லை... அட்டை டூ அட்டை படித்தால்தான் பாஸ் என்பதால் சில மாணவர்கள் ஒரு மாதத்தினுள் கலைப்பிரிவுக்கு வந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது.

எதார்த்த நிலை
70 மதிப்பெண்ணுக்கு 54 மதிப்பெண்கள் பயன்படுத்தி (applied) எழுதும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 70 மதிப்பெண் எழுத்துத் தேர்வும் 30 மதிப்பெண் பிராக்டிகல் மற்றும் இன்டர்னெல் மதிப்பெண் ஆகும். இதில் 70-க்கு 15 மதிப்பெண்ணும் 30-க்கு 20 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும்.

கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர் என்பதைவிட கல்வி கற்பதில் விழிப்புணர்வு இன்றி, ஆழ்ந்து கற்கும் ஆர்வமின்றி, எதையும் அசாதாரணமாக அணுகும் நிலையில் தற்போதைய மாணவர்கள் சிலர் உள்ளனர். சிலர் மனச்சுமையில் பள்ளியை விட்டே வெளியேறிவிடுகின்றனர்.
Was


பலரும் கலைப்பிரிவைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளதால் ஆசிரியர்கள் அறிவியல் பிரிவில் சேர ஆள் பிடிக்க வேண்டியுள்ளது.

70 பேர் சேர்ந்தால் 40 பேர் கலைப்பிரிவு, 30 பேர்தான் அறிவியல் பிரிவை நாடுகின்றனர். இதிலும் 5 பேர் எப்போது வேண்டுமானாலும் அணி மாறும் நிலையில் உள்ளனர்.

2018-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட 95 பள்ளிகளில் அறிவியல் பிரிவு முதலில் ஆரம்பிக்கப்படும். கலை பிரிவு ஏற்படுத்த கிராமப் புறமாயின் 15 மாணவரும், நகர்மயமாயின் 30 மாணவர்கள் சேர்த்தால் கலைப்பிரிவு ஆரம்பித்துக் கொள்ளலாம்.

அதன்பின் வரலாறு, பொருளியல், வணிகவியல் பணியிடம் வழங்கப்படும்.

பல பள்ளிகளில் சுயநிதிப் பாடப் பிரிவாக ஆர்ட்ஸ் குரூப் ஆரம்பிக்கப்படுகிறது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாகவே கலைப்பிரிவு பாடம் ஆரம்பிக்கப்பட்டு ஊதியம் கொடுத்து வருகின்றனர்.

போட்டா போட்டி
அறிவியல் பிரிவு எடுத்த பள்ளி மாணவ மாணவியர் 2 வருட படிப்புடன் ஜே.இ.இ, நீட் தயாரிப்பு எனக் கூடுதல் பாடச்சுமையும் உண்டு. கொஞ்சம் சோர்ந்தாலும் அங்கென்ன சத்தம்னு அசரீரி கேட்பதுபோல் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். ஸ்பெஷல் கிளாஸ் எனும் பெயரில் ஜாக்கி குதிரையை ஓட்டுவது போல் ஓடு ஓடு என்று விரட்டி, பொதுத்தேர்வு வரை பயிற்சி கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள் தனியார் பள்ளியில்.


அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சற்றும் இளைத்தவர்கள் அல்ல. தங்களால் ஆன பணிச்சுமைக்கு இடையிலும் பாரத்தை சுமக்கிறார்கள்... பணியிடைப்பயிற்சி, சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று எனும் மூவகை சான்று பெற்றுத் தர வேண்டும். ஆதார் எடுத்துக் கொடுக்க வேண்டும். வங்கிக் கணக்கு மாணவ-மாணவியர் பெயரில் திறக்க வேண்டும்.

சைக்கிள், லேப்டாப் கொடுப்பதை EMIS தளத்தில் பதிய வேண்டும். இதுபோக மதிப்பெண், ஆதார் உள்ளவர், இல்லாதவர், இல்லையெனில், ஏன் இல்லை என அந்தந்த வகுப்பாசிரியர்தான் கணினியில் ஒவ்வொருவருக்கும் பதிவேற்ற வேண்டும். இப்பணி பளுவுக்கு இடையில்தான் பாடங்களை நடத்த வேண்டும்.

குறைவான மதிப்பெண் எடுத்தவர்களைத் தனியார் பள்ளிகள் ஒதுக்கும்போது அரசுப் பள்ளிகள்தான் அரவணைக்கின்றன. ஒவ்வொருவரையும் கவனம் எடுத்து அனைவரையும் தேர்ச்சியும் பெறவும் வைக்கின்றனர். இன்றும் பல அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதம் பெறுவதில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களின் பங்கு அதிகம்.

அறிவியல் பிரிவின் நன்மைகள்
*கலைப்பிரிவு தான் ஈசி எனும் மனநிலை மாற வேண்டும்.

*அறிவியல் பிரிவு படித்தால் கலைப்பிரிவு பயில்வோரைவிட உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

*அறிவியல் பிரிவு படிப்போர்க்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற பாடப் பிரிவுகள் பயிலலாம். UPSC, TNPSC பாடத் தயாரிப்புக்கும் எளிது.

*அறிவியல் பிரிவு படிக்கும்போது கணிதமும் அறிவியலும் படித்தால் பிற்காலத்தில் போட்டித்தேர்வுக்கு உபயோகப்படும்.

*மேல்நிலை வகுப்பில் அறிவியல் பிரிவு படிப்பவர்கள் 70 மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி அடையலாம். கலைப்பிரிவினர் 90 மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

*அறிவியல் கடினம் என்போர் கலைப் பிரிவும் கடினம்தான். பொருளியல் படிப்பிலும் கணக்குகள் உள்ளன.

*கலை கல்லூரிகளில்கூட இளஞ்கலையில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் எனப் பல்வேறு பாடங்கள் தேர்ந்தெடுக்க ஆப்சன் உண்டு. கலைப்பிரிவில் ஒப்பிடும்போது அதிகம்தான்.

இடர்கள்
*அறிவியல் பிரிவு எடுத்தால் டியூஷன் செல்ல வேண்டும் என ஒரு நம்பிக்கை மாணவர்கள் மத்தியில் உண்டு. அதற்கு வசதி இல்லாதவர் அடுத்த ஆப்சன் தேடுகிறார்கள்.

*சிறப்பு வகுப்பினை கூடுதல் சுமையாகப் பார்க்கின்றனர். பேருந்து வசதி இல்லாதவர்கள் தாமதமாய் செல்வது தினசரி இடர்பாடினுள் ஒன்று.

*மற்ற பிரிவு மாணவர்கள் அழுத்தமின்றி இருப்பதைப் பார்க்கும்போது பொறாமை கொள்கின்றனர்.

*வினாத்தாள் அனைத்தும் கல்லூரி தரத்தில் இருப்பதைப் பார்த்து மனதளவில் சோர்ந்து விடுகின்றனர்.

*பெற்றோர்/உறவினர் எல்லாம் சயின்ஸ் குரூப் எடுத்திட்ட ஒழுங்கா படிக்கணும் என்பதை ஓயாமல் சொல்லும்போது வெறுப்பு வருகிறது.

*600 பக்கம் படித்தால்தான் 70 மதிப்பெண் எடுக்க முடியும் என்பது இருபதாண்டுக்கு முன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியின் மனநிலை மாணாக்கர்க்கு ஏற்படுகிறது.

*நீட் போன்ற தேர்வு, இன்ஜினீயரிங் போன்றவற்றில் போட்டி அதிகம் என்பதால் ஏதேனும் இளங்கலை கணிதம்/இயற்பியல் படிப்பே போதும் எனும் மினிமம் மார்க் மனநிலைக்கு சிலர் வந்துவிடுகின்றனர்.

*சமீபத்தில் சி.பி.எஸ்.இ பாடத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 9 முதல் 12 வரை 30% பாடங்கள் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

*சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு இயற்பியலில் இயக்க விதி, ஒளியியல், தொடர்பியல் அமைப்புகளும் வேதியியலில் சுற்றுச்சூழல் வேதியியல், பலபடி, தனிமங்களை தனிமைப்படுத்துவதற்கான கொள்கை, மனித உயிரியல் இனப்பெருக்கம் ஆகியவற்றை நீக்கியுள்ளது.


தீர்வு
தமிழகத்தில் பாடங்களை நடத்த பிப்ரவரி வரை அவகாசம் கொடுத்து, மார்ச்சில் திருப்புதல் வைத்து ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்தினால் இச்சிக்கல் ஓரளவு தீரும். தமிழக பாடத்திட்டத்திலும் CBSC போல் கல்வியாளர் குழுவை அமைத்து பாடத்திட்டங்களின் அளவைக் குறைக்க வேண்டும்.

கடினமான பகுதிகளை நீக்க வேண்டும். பல்லுக்கு ஏற்ற பக்கோடா கொடுப்பதைப் போல வயதுக்கு ஏற்ற பாடப்பொருளை அளவை அமைக்க வேண்டும். இக்கல்வியாண்டு புதிய பாடத்திட்டத்தின் முதல் பிரிவினர் என்பதால் அனுபவ குறைவு, பாடப் பொருள் தொடர்பான இடர்ப்பாடு இருக்கலாம்.

இனி வரும் காலங்களில் அறிவியல் பிரிவில் ஆர்வம் ஏற்பட ஆசிரியர்கள் பாடப் பொருளை எளிமையாகக் கொண்டு செல்வது அவசியம். இதையெல்லாம் கடந்து ஒரு மாணவன் துணிந்து முதல் பிரிவு எடுக்க முக்கிய காரணம் அறிவியல் ஆசிரியரே ஆவார். முழுக்க முழுக்க பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியரே உயர்கல்வியில் அறிவியல் பிரிவை பெரும் விருப்பத்துடன் தேர்ந்தெடுக்க வைக்கின்றார். அறிவியல் ஆசிரியர் ஆர்வமின்றி இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

If you find science boring, you're learning it from a wrong teacher எனும் வரி நினைவுக்கு வருகிறது.



மிரட்டும் பாடச்சுமை , கலை பிரிவில் ஆர்வம் காட்டும் முதல் மதிப்பெண் மாணவர்கள், ஏன்..? எதனால்..?  மிரட்டும் பாடச்சுமை , கலை பிரிவில் ஆர்வம் காட்டும் முதல் மதிப்பெண் மாணவர்கள், ஏன்..? எதனால்..? Reviewed by Rajarajan on 24.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை