தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் ESI பொருந்தும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Was
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் ESI பொருந்தும் - சென்னை உயர்நீதிமன்றம்
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் (இ எஸ் ஐ) பொருந்தும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்துமா என்பது குறித்த விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணையை துவங்கியது.
கல்வி நிறுவனங்களுக்கும் இ எஸ் ஐ சட்டம் பொருந்தும் எனக் கூறி, தமிழக அரசு 2010ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. இதை எதிர்த்து அகில் இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்று கல்வி நிறுவனங்களின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஏற்கனவே இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தற்போது தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், கேரள உயர் நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி, தமிழக அரசு உத்தரவு அமல்படுத்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள், வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், இ.எஸ்.ஐ. சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா, கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா இல்லையா என்பன உள்ளிட்ட சட்ட கேள்விகள் எழுப்பப்பட்டு, அவற்றுக்கு பதில் காணும் வகையில் இந்த வழக்குகள் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டார்.
இதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நீதிபதி அனிதா சுமந்த், நீதிபதி ஆஷா ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டு, இந்த வழக்கை விசாரித்தது. கடந்த மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இந்த அமர்வு அமைக்கப்பட்டது.
விசாரணையின் போது, தனியார் கல்வி நிறுவனங்கள் தரப்பில், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா, இல்லையா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என வாதிட்டார்.
தொழில் நிறுவனங்கள் போல கல்வி நிறுவனங்களை கணக்கிடக்கூடாது என்றும், இ.எஸ்.ஐ. சட்டத்திலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதேபோன்று, நாட்டின் பிற உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட வெவ்வேறு அமர்வுகள் அனைத்தும், கல்வி நிறுவனங்களை இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டு வருவது சரியென தீர்ப்பளித்துள்ளதை மத்திய மாநில அரசுகள் சுட்டிக்காட்டின.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பிற வர்த்தக நிறுவனங்களைப் போல தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இ எஸ் ஐ சட்டம் பொருந்தும் எனவும், இ எஸ் ஐ- யில் இருந்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விலக்களிக்க முடியாது என தீர்ப்பளித்தனர்.
இ எஸ் ஐ வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் ESI பொருந்தும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Reviewed by Rajarajan
on
29.7.20
Rating:
கருத்துகள் இல்லை