தேசிய கல்வி கொள்கை சாதக பாதகம் குறித்த ஆய்வு
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதன்மீது கல்வியாளர்கள் பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் பல்வேறு சாதகமான அம்சங்கள் நிறைந்து இருப்பதாக கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக எதிர்கால மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி என்பது வரவேற்கத்தக்க அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.
Was
பள்ளிகளில் இணைய வழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளதால் மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியிலான கல்வியை கற்க ஏதுவாக அமையும் என்கின்றனர்..
மாணவர்கள் படிக்கும் போதே தொழில்திறன் கற்றுத்தரப்படும் என்பதால், பள்ளிப்படிப்பு முடித்து வரும்போது அவர்கள் தொழில் திறனோடு வெளி வருவார்கள்.
அதுபோல இனி ஆசிரியர்களின் திறனும் தொடர்ந்து மதிப்பீடு செய்ய இருப்பதும் வரவேற்கத்தக்க முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
உயர்கல்வியில் பாட சுமையை குறைக்க உள்ளதால், மாணவர்களின் மன அழுத்தம் குறையும். படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு இடைவெளி தேவைப்பட்டால் எடுத்துக் கொண்டு, மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் நிலை உருவாக்கப்பட உள்ளது.
M.Phil படிப்பை நீக்கி இருப்பது மிகவும் சரியாக எடுக்கப்பட்ட முடிவு என்பதும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. மூன்றாண்டு இளங்கலை படிப்புகளை, நான்காண்டுகளாக மாற்றி இருப்பதால் உலக அளவில் மாணவர்கள் போட்டிபோடும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்கின்றனர்.
அதே நேரத்தில் பல்வேறு குறைபாடுகளும் இருப்பதாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் இடைநிற்றலை அதிகப்படுத்தும் என கூறுகின்றனர்.
அதேபோல நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் எனும்போது ஒவ்வொரு மாநிலத்திற்குமான கலாச்சாரம், வரலாறு, மாமன்னர்கள் பற்றிய வரலாறுகளை தெரிந்து கொள்ளாமல் போகும் நிலை ஏற்படும்எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
கல்லூரிகளுக்கு அதிக அளவில் தன்னாட்சி அதிகாரம் வழங்கவும் புதிய கல்விக் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் எனவும் கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தேசிய கல்வி கொள்கை பரவலாக வரவேற்பை பெற்று இருந்தாலும், இதிலுள்ள சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் திட்டம் முழுமை பெறும் எனவும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை