கொரோனா சைலன்ட்டாக மனித உடலுக்குள் நுழையும் ரகசியம்.. விஞ்ஞானிகள் அதிரடி தகவல்!
புதிய ஆய்வு ஒன்றில் கொரோனா வைரஸ் எப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் மனித உடலுக்குள் நுழைகிறது என தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு காரணம், அந்த வைரஸ் குறித்த அதிக தகவல்கள் இல்லாததே.
மேலும், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அந்த வைரஸ் ஏமாற்றுவதால் எந்த மருந்து கொடுத்தாலும் அது பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா வைரஸ் எப்படி ஏமாற்றுகிறது? என்பது பற்றிய முக்கிய தகவல் ஆய்வில் வெளியாகி உள்ளது.
மருந்து இல்லை
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சம் பேரை தாண்டி பாதித்துள்ளது. 83,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாடும் சில மருந்துகளை கூட்டாக கொடுத்து வருகிறது. சிலர் குணமடைகிறார்கள். சிலர் பலியாகிறார்கள்.
ஏமாற்றி உள்ளே நுழையும் கொரோனா
கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எப்படி இறக்கிறார்கள், எப்படி குணமடைகிறார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது. இந்த வைரஸ் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக ஏமாற்றி உள்ளே நுழைவது தான் இதை பற்றி புரிந்து கொள்வதில் உள்ள பெரிய சிக்கல் ஆகும்.
இங்கிலாந்து ஆய்வு
அதிக ஆய்வுகள் செய்யப்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையில், இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் பல்கலைக்கழகத்தில் இது பற்றிய ஆய்வு ஒன்று செய்யப்பட்டு, கொரோனா வைரஸ் (SARS-CoV2-)-இன் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்
அந்த மாதிரியின் மூலம் கொரோனா வைரஸ் எப்படி மனித உடலுக்குள் சத்தமே இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்திக்கான ஆன்டி-பாடியை ஏமாற்றி உள்ளே நுழைகிறது என்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம், நல்ல செய்தியாக எச்ஐவி வைரஸ் போல இல்லாமல், இது அதிக பாதுகாப்பு கவசங்களை கொண்டிருக்கவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.
சர்க்கரை பூச்சு
பேராசிரியர் மேக்ஸ் க்ரிஸ்பின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், கொரோனா வைரஸை சுற்றி நிறைய கூரான பகுதிகள் (Spikes) இருப்பதும், அவை கிளைகன் (Glycan) என்ற சர்க்கரை பூச்சு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அது தான் நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றுகிறது.
மாறுவேடம்
கொரோனா வைரஸின் புரதம், சர்க்கரைப் பூச்சாக மாறுவேடம் போட்டுக் கொண்டு இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. "ஸ்வீட்" ஆன பொருளாக தன்னை காட்டிக் கொண்டு மனித உடலுக்குள் அந்த வைரஸ் நுழையும் போது நோய் எதிர்ப்பு சக்தியால் அதை அடையாளம் காண முடியாது.
அடர்த்தி குறைவு
பசுந்தோல் போர்த்திய புலியாக உள்ளே நுழையும் கொரோனா வைரஸ், அதன் மீது இருக்கும் அதிக கூரான பகுதிகளால் அதிக சர்க்கரைப் பூச்சை கொண்டு, எளிதில் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. அதிக சர்க்கரைப் பூச்சு இருக்கிறது என்றாலும் அதன் அடர்த்தி குறைவு என்பது நல்ல செய்தி.
எச்ஐவி உதாரணம்
எச்ஐவி போன்ற சில வைரஸ்கள் இதே போன்ற பூச்சுக்களை கடினமாக வைத்துக் கொண்டு நீண்ட காலம் ஒரே உடலில் வாழ்கிறது. அதன் கடினமான பூச்சுக்களால் அவற்றை நோய் எதிர்ப்பு சக்தியால் அடையாளம் காண்பதும் கடினமானதாக மாறுகிறது.
கொரோனாவின் இயல்பு
ஆனால், கொரோனா வைரஸின் சர்க்கரைப் பூச்சின் அடர்த்தி குறைவாக உள்ளது. அப்படி என்றால் இந்த வைரஸ் ஒரே உடலில் நீண்ட காலம் வாழும் இயல்பு கொண்டதல்ல, ஒருவரிடம் இருந்து வேறு ஒருவருக்கு விரைவாக மாறும் குணம் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா சைலன்ட்டாக மனித உடலுக்குள் நுழையும் ரகசியம்.. விஞ்ஞானிகள் அதிரடி தகவல்!
Reviewed by Rajarajan
on
8.4.20
Rating:
கருத்துகள் இல்லை