ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதனிடையே, ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று பரவலாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான சில கூடுதல் வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளைக் கண்காணிக்க ஒவ்வொரு பள்ளியும், ஒரு மண்டல அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் என்பது கட்டாயமில்லை என்றும், குடும்ப சூழலால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு வருகைப் பதிவேடு மற்றும் மதிப்பெண்கள் கணக்கிடக் கூடாது என்றும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு முழுமையாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களை மனப் போராட்டத்துக்கு உள்ளாக்கும் எந்த செயலிலும் ஆசிரியர்கள் ஈடுபடக் கூடாது என்றும் கல்வித்துறை ஆணையர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை