Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

"நாங்க இனி டாக்டர் ஆகவே முடியாதா?" ஏற்றத் தாழ்வுகளுடன் வாழும் ஒரு சமுதாயத்தில், சரிசமமான தேர்வு என்பது ஒருபோதும் நியாயமாகாது..?



``10.30 மணி வண்டிய விட்டுட்டேன். இனிமே 2 மணி வண்டியிலதான் போவணும். எப்போவும் ஐஸ் வண்டிக்காரன் மாதிரி `பாம் பாம்'னு மணி அடிச்சுட்டே வருவான் பஸ்ஸுக்காரன்... இன்னைக்கு சத்தமே இல்லாம ஊருக்குள்ள வந்து திரும்பிட்டானே..."


- இப்படி புலம்பியபடியே பேருந்துக்குக் கால் கடுக்கக் காத்திருக்கும் மக்களைக் கொண்ட பல கிராமங்களில் என் கிராமமும் ஒன்று.


``என்ன சூரியாத்தா... மூஞ்செல்லாம் வீங்கிக் கெடக்கு. பெரியாஸ்பத்திரில போயிட்டு ஊசி போட்டுக்கிட்டு வந்தா, கொஞ்சம் வத்திப் போகும்ல" என்றால், ``எதுப்பற வர்ற மனுச, மக்க கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது. இதுல நானு எப்புடிக் கௌம்பி, எங்க போயி, திக்குத் தெரியாம நிக்குறது. மலையேறியாத்தா புண்ணியத்துல நான் உசுரோட இருந்தேன்னா, நீ டாக்டருக்குப் படிச்சு முடிச்சு, ஆத்தாளுக்கு ஊசி போட்டு வுடு" எனச் சூரியாத்தா சொன்னபோது, நான் 9-ம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.


என் குடும்பத்தின் முதல் மருத்துவர் மட்டுமல்ல, முதல் பட்டதாரியும் நான்தான். என் மக்களின் முதல் மருத்துவர் நான்.


நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

`அன்னன்னைக்கு வேலைக்கு ஓடுனாதான் கஞ்சி' என விடிந்ததும் விடியாததும் வேலைக்கு ஓடும் அன்றாடங்காய்ச்சித் தாயின் மகள், இப்போது பிரசவ அறையில் பயிற்சி மருத்துவராக அமர்ந்துகொண்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். `யாரெல்லாம் இனி மருத்துவம் படிக்க முடியாது, டாக்டராக முடியாது' என இந்த `நீட் தேர்வு' ஒதுக்கித் தள்ளப் பார்க்கிறதோ, அவர்களுக்கான அத்தனை பொருத்தங்களையும் ஒருங்கே பெற்றிருப்பவள் நான்.


பின்தங்கிய கிராமங்களில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்ற எத்தனையோ மருத்துவர்கள், இன்று சமூக அக்கறையோடு மிக உயர்ந்த இடத்தை எட்டியிருக்கின்றனர். இப்படி, தகுதியை வளர்த்துக்கொள்ளத்தானே கல்வி? இங்கே கல்வியே தகுதி அடிப்படையில்தான் வழங்கப்படும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?



அரசு வடிவமைத்த பாடத்திட்டத்தை 12 வருடங்கள் அரசுப் பள்ளியில் படிக்கிறோம். அரசு நடத்தும் தேர்வுகளை எழுதுகிறோம். அரசு அந்த விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண்ணையும் வழங்குகிறது. ஆனால், அம்மதிப்பெண்ணை அந்த அரசே மதிக்காமல் `ஒரு தனித் தகுதித் தேர்வு நடத்தியே தீருவேன்' என அடம்பிடிக்கிறதென்றால் யார் மீது, எதன் மீது தவறு இருக்கிறது?


ஒரு நடைமுறையில் பிழையிருக்கும்போது, அதற்குப் பதில் வேறொரு நடைமுறையை மாற்றுவதென்பது இயல்பு. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு நடந்த மருத்துவக் கலந்தாய்வுகளில் என்ன பிழை இருந்தது?


`இதெல்லாம் படிங்க. ஆனா இதுலயிருந்து கேள்வி வரலாம். வராமலும் போகலாம். அதை எப்படி வேணும்னாலும் கேட்பாங்க. எங்கயிருந்து வேணும்னாலும் கேட்பாங்க' எனச் சொல்லும்போது, மாணவர்களுக்கு எப்படி அதைப் படிக்கத் தோன்றும்? தேர்வை எதிர்கொள்ளும் திடம் எப்படி வரும்?


`அண்டா குண்டான் நகை நட்ட அடகு வெச்சாவது புள்ளைய படிக்க வெச்சிடணும்' என கோச்சிங் கிளாஸில் சேர்த்துவிடும் ஏழ்மை நிலை, நடுத்தர வர்க்கத்துப் பெற்றோர்கள், தன் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறார்கள். ஒரு நுழைவுத் தேர்வின் பயிற்சி வகுப்புக்காக, தங்கள் திறனுக்கு மீறி தனக்காகப் பெற்றோர்கள் செலவழிப்பதைப் பார்க்கும்போது, அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படும் மனஉளைச்சலுக்கு யார் பொறுப்பு?

பரீட்சை தினத்தில், தங்கள் கிராமத்திலிருந்து 50, 100 கிலோமீட்டரெல்லாம் பயணித்து வந்து, பயணம் தந்த பதற்றமும் சோர்வுமாக நீட் தேர்வு மையத்தை அடைகிறார்கள் எங்கள் கிராமப்புற மாணவர்கள்.


``கம்மலைக் கழட்டு..."


``தாலியைக் கழட்டு..."


``ஜடையக் கழட்டிவிடு, முடிக்குள்ள செக் பண்ணணும்..."


``மெட்டியக் கழட்டு..."


``உன் பார்வையே சரியில்லையே, கொஞ்சம் உள்ள வா, முழுசா செக் பண்ணணும்..."


``இது என்ன டிரெஸ் இந்த கலர்ல இருக்கு... போ... போய் வேற டிரெஸ் மாத்திட்டு வா..."


``உன் கண்ணாடி ஃப்ரேம் ஏன் இவ்ளோ பெருசா இருக்கு? அதுக்குள்ள எதையும் ஒழிச்சு வெச்சிருக்கியா? கண்ணாடிய இங்க கொடு..."


- இப்படியெல்லாம் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன்பே, இத்தனை தனிமனிதத் தாக்குதலையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்திவிட்டு, `உள்ள போயி உன் திறைமையையெல்லாம் பரீட்சையில காட்டு...' என உள்ளே அனுப்பும்போது, அந்த மாணவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?


`ஏன்டா டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசைப்பட்டோம்...' என்று ஒருமுறையாவது தோன்றிவிட்டுப் போகாதா? அப்படியான எண்ணங்கள் அவர்கள் மனதில் தோன்றிவிட வேண்டும் என்பதுதான் குறிக்கோளா?


எங்களுடைய முதலாமாண்டு வகுப்பில், ``தமிழ் மீடியம் ஸ்டூடன்ட்ஸ்லாம் எத்தனை பேருப்பா? எழுந்து நில்லுங்க பார்த்துக்கிறேன். ஏதாவது டவுட் இருந்தா எப்போ வேணும்னாலும் என்கிட்ட வந்து கேளுங்க" எனப் பேராசிரியர்கள் சொல்லும்போது கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் எழுந்து நிற்போம்.


நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின்னர், எங்கள் கல்லூரியில் 2017-ம் ஆண்டு சேர்ந்த முதலாமாண்டு மருத்துவ மாணவர்களில், ஒரே ஒரு மாணவி மட்டும்தான் தமிழ் மீடியம். அவரும் இரண்டு வருடங்கள் கோச்சிங் கிளாஸ் சென்று நீட் எழுதியவர்.


அப்படியானால், கோச்சிங் கிளாஸ் போக முடியாதவர்கள் இனிமேல் மருத்துவராகவே முடியாதா?


கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு கிராமப்புற மக்களின் எண்ணவோட்டம் நன்றாக விளங்கும். `நான் படிச்சு முடிச்சுட்டு திரும்ப எங்க ஊருக்கே போயிடுவேன்' என்பது அவர்களில் பெரும்பாலானோரின் மனநிலையாக இருக்கும்.


நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, கிராமங்களில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றும்? அப்படியே தோன்றினாலும், அத்தி பூத்தாற்போல யாரோ ஒருவருக்குத்தான் தோன்றும். அப்படியானால், கிராமப்புற மக்களுக்கான மருத்துவம் என்ன ஆகும்?


கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு வேட்டு வைப்பதோடு மட்டுமல்லாமல், கிராமப்புற மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ சேவைக்கும் பெரிய கேள்விக்குறியை வைக்கும் ஒரு தேர்வு எப்படி சரியானதாக இருக்கும்?


நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

Photo: Vikatan / T. Vijay

என்னோடு படிக்கும் சக தோழியின் அப்பா, ஊரில் கூலி வேலை செய்பவர். என் தோழியும் அவர் அக்காவும் நீட் வருவதற்கு முன்பே மருத்துவப் படிப்புக்குள் வந்துவிட்டனர். அவர்களின் தம்பி பன்னிரண்டாம் வகுப்பு முடித்தபோது, நீட் நடைமுறைக்கு வந்துவிட்டது. ப்ளஸ் டூவுக்குப் பின்னர் இரண்டு வருடங்கள் கோச்சிங் சென்று தேர்வு எழுதியும் மருத்துவ சீட் கிடைக்கவில்லை. இப்போது பி.எஸ்ஸி சேர்ந்திருக்கிறாராம்.


``என்னக்கா பண்றது... எங்கள மாதிரி கூலித் தொழிலாளிங்களோட பிள்ளைங்ககூட மார்க் இருந்தா டாக்டராகலாம்னு இருந்த காலத்தை தொலைச்சுட்டோம். நாம தப்பிப் பிழைச்சுட்டோம். நம்மள மாதிரி குடும்பத்துல இருந்து வர்ற தம்பி, தங்கச்சிங்களுக்கு எல்லாம் இப்போ கதவை அடைச்சுட்டாங்கள்ல...'' என்று சொன்னவளுக்கு என்ன பதில் என்னால் சொல்லிவிட முடியும்?


``செருப்ப மறந்துட்டுப் போயிட்டேன். `டாக்டர் அம்மா... செருப்புப் போடாம வர்றீங்களே'னு கேலி பண்றாங்க" - அம்மா பெருமையும் வெட்கமுமாகச் சிரித்துக்கொண்டே என்னிடம் சொல்லும். இனி இப்படியான கிராமத்து அம்மாக்களின் வெள்ளந்திச் சிரிப்புகளைப் பார்க்கவே முடியாமல் போய்விடுமா?


நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

Photo: Vikatan / T. Vijay

இந்த நீட் தேர்வு இருந்திருந்தால், எனக்கும் என்னைப் போன்ற பல மருத்துவர்களுக்கும் வெள்ளைக் கோட்டும், ஸ்டெதஸ்கோப்பும் கனவாக மட்டுமே இருந்திருக்கும். இனி என்னைப் போன்றோர்களுக்கு இது கனவாக மட்டுமே இருந்திடுமோ என்ற பயமும் ஏக்கமும் கோபமும் கலந்த உணர்வு இன்னும் வயிற்றைப் பிசைந்துகொண்டுதானிருக்கிறது.


இதை மீண்டும் மீண்டும் சொல்கிறோம்.


பல்வேறு ஏற்றத் தாழ்வுகளுடன் வாழும் ஒரு சமுதாயத்தில், சரிசமமான தேர்வு என்பது ஒருபோதும் நியாயமாகாது.


- மருத்துவர். ஆனந்தி பிரபாகர், பயிற்சி மருத்துவர்.

"நாங்க இனி டாக்டர் ஆகவே முடியாதா?" ஏற்றத் தாழ்வுகளுடன் வாழும் ஒரு சமுதாயத்தில், சரிசமமான தேர்வு என்பது ஒருபோதும் நியாயமாகாது..? "நாங்க இனி டாக்டர் ஆகவே முடியாதா?" ஏற்றத் தாழ்வுகளுடன் வாழும் ஒரு சமுதாயத்தில், சரிசமமான தேர்வு என்பது ஒருபோதும் நியாயமாகாது..? Reviewed by Rajarajan on 21.9.20 Rating: 5

கருத்துகள் இல்லை