மொபைல் போன் எனும் 'மாயலோகம்' - சுதாரிக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு போகும்!
Was
'என்ன சார், நீங்க போயி... இப்படி பையனை அடிக்கலாமா...'
'பின்னே என்னங்க... இவனை அடிக்காம கொஞ்ச சொல்றீங்களா? எந்நேரம் பார்த்தாலும் என்னோட மொபைல் போனை நோண்டிட்டே இருந்தான்... சரி, ஏதோ ஆன்லைன் கிளாஸ் படிக்கிறான்னு நினைச்சு, நானும் கவனக்குறைவா இருந்துட்டேன்'.
'இன்னைக்கு போய் என்னோட பேங்க் பாலன்ஸ் பார்த்தா, அக்கவுண்டுல இருந்த ரெண்டு லட்ச ரூபாய் காலி... கேட்டா, ஆன்லைன் சீட்டு விளையாடி இருக்கீங்கன்னு பேங்குல சிரிக்கிறாங்க. விசாரிச்சா, இவன்தான் ஆன்லைன்ல சீட்டு விளையாடி இருக்கான்.பேங்குல இருந்து வர்ற, எஸ்.எம்.எஸ்.,களையும் கையோட 'டெலிட்' பண்ணியிருக்கான். இது மட்டுமில்ல, வரவர இவனோட ஆக்டிவிட்டீஸ் எதுவுமே சரியில்லைங்க. அப்புறம் என்ன செய்ய சொல்றீங்க...' என்று ஆவேசப்பட்டார் அந்த தந்தை.
அத்தனையையும் கேட்ட நண்பர், இருவரையும் சாய்பாபா காலனியில் உள்ள, மனநல மருத்துவர் மாரிக்கண்ணனிடம் அழைத்து சென்றார்.
இரண்டு மாத சிகிச்சைக்குப் பின், தற்போது சிறுவனின் மனநிலை, சாதாரண மாணவர்களைப்போல் மாறியுள்ளது.
மனநல மருத்துவர் டாக்டர் மாரிக்கண்ணன் கூறியதாவது:சிலர் குடிக்கு அடிமையாவது போல, வேறு சிலர் சூதாட்டத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதை (Pathological Gambling) என்று கூறுவோம். முதலில் டைம் பாஸ் செய்ய, சீட்டு விளையாடுவார்கள். பின்னர் பணம் வைத்து நண்பர்களை சேர்த்துக் கொண்டு விளையாடுவார்கள்.அதில் கிடைக்கும் வெற்றியும் பணமும், ஒரு வித சந்தோஷ உணர்வையும், வெற்றி மனநிலையையும் தருகிறது. அதனால், எப்போதுமே விளையாடுவது பற்றியும், ஏற்கனவே விளையாடிய அனுபவங்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
வலைதளங்களின் உதவி
சில நேரங்களில் பணத்தை இழந்தாலும், மறுபடி, மறுபடி அதையே தொடர்ந்து செய்வார்கள். அதன் நுணுக்கங்கள் குறித்து, சிந்திப்பார்கள். யூ டியூப் போன்ற வலைதளங்களை அணுகுவார்கள். அதில், கிடைக்கும் செய்திகள், அவர்கள் ஆர்வத்தை மேலும், மேலும் துாண்டும். இதனால் ஆழ்மனம், தானாக இவ்விளையாட்டைப்பற்றி சிந்திக்க தொடங்குகிறது. இதை, Compulsive thinking என்று கூறுவார்கள்.
குடும்பத்தினர் விசாரித்தால் மறைப்பார்கள்; வேறு காரணங்கள் சொல்லுவார்கள். ஜெயித்து விடலாம் என, மீண்டும், மீண்டும் விளையாடுவார்கள். ஆனால், அதில் கிடைக்கும் தோல்விகள், அவருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தி விடும். தன்னம்பிக்கை குறைந்து, படிப்பு, வேலை குடும்பம் போன்றவற்றில் கவனம் குறையும். இதே போல, ஆன்லைனில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளும், 'நான்கு பேரை கொன்றேன், ஐந்து பேரை குத்தினேன்...' என்ற பேச்சு வழக்காகி, குழந்தைகள் மனதில் சுடுதல், கொல்லுதல் சாதாரணமானது என்ற எண்ணத்தை ஆழமாக பதிக்கிறது. அவர்களையும் அறியாமல், வன்முறை கலாசாரம் மனதில் பதிந்து விடுகிறது.
ஆபாச வெப்சைட்டுகள் அறிமுகம்
இப்படி கேம்ஸ் விளையாடும்போது, ஆபாச வெப்சைட்டுகள் அறிமுகமாகின்றன. அதில், சிலர் ஈடுபாடு கொண்டு தவறான பழக்க, வழக்கத்துக்கு ஆளாகிறார்கள். இதனால், படிப்பில் ஈடுபாடு குறைந்து, படிப்பு இரண்டாம் பட்சமாகிறது.
எப்போது ஆன்லைன் கிளாஸ் முடியும், கேம்ஸ் விளையாடலாம் என சிந்திப்பதால், கல்வியில் போதிய கவனம் செலுத்த முடியாது. விளையாடும்போது பெற்றோர் கண்டித்தால் கோபம், ஆக்ரோஷம், மரியாதை இல்லாமல் பேசுவது, பொருட்களை உடைப்பது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது என வன்மம் அதிகமாகும். நாளை பள்ளிகள் திறந்து, வீட்டுக்கு வந்தாலும், மொபைல் போனில் மாணவர்கள் மூழ்கி விட வாய்ப்புண்டு.
தீர்வு என்ன?
* இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளோ, பெரியவர்களோ ஆன்லைன் சூதாட்டம், கேம்ஸ் திரும்ப, திரும்ப விளையாட வேண்டும் என ஆசை வருவதை கட்டுப்படுத்த, அவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டும்.
* விளையாட்டில் தோல்வி மற்றும் பண இழப்பால் ஏற்பட்ட மனக்காயங்கள், கவலைகள், வெறுப்பு, கோபம், குற்ற உணர்வு போன்றவற்றை கவுன்சிலிங், யோகா, தியானம் ஆகியவற்றால் மாற்றலாம்.
* தனிமையாக இருப்பதை குறைத்து, குடும்பத்தினருடன் ஒன்றிப் பழகுவது, பண விவகாரங்களை பெற்றோர் நிர்வகிப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் பலன் தரும்.
* குறிப்பிட்ட நேரம் மட்டும், மொபைல் போனை பயன்படுத்தலாம். குழந்தைகளின் மொபைல் போனை, பெற்றோரும் அவ்வப்போது எடுத்து பயன்படுத்த வேண்டும். பாஸ்வேர்டு போட அனுமதிக்கக்கூடாது.நண்பர்களை போல குழந்தைகளிடம் பேசி பழகினாலே, நாம் நினைக்கும் மாற்றங்களை அவர்களிடம் எளிதாக ஏற்படுத்தலாம்.
இவ்வாறு, டாக்டர் மாரிக்கண்ணன் கூறினார்
கருத்துகள் இல்லை