நீட் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகம், சாய்ஸ் முறை கேள்விகளை தேர்ந்தெடுக்க அனுமதி
வழக்கமாக நீட் வினாத்தாளில், 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா, 4 மதிப்பெண்கள் வீதம், 720 மதிப்பெண் வழங்கப்படும். இந்த வினாத்தாள் முறையில், இந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக, சாய்ஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு பாடத்திலும், ஏ பிரிவில், 35; பி பிரிவில், 15 என, நான்கு பாடங்களுக்கு தலா, 50 கேள்விகள் வீதம், மொத்தம், 200 கேள்விகள் இடம் பெற உள்ளன. இவற்றில், 180 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும்.
அதாவது, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என, ஒவ்வொரு பாடத்திலும், ஏ பிரிவில் உள்ள, 35 கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும். பி பிரிவில், 15 கேள்விகளில், சாய்ஸ் அடிப்படையில், தங்களுக்கு நன்றாக விடை தெரிந்த, 10 கேள்விகளுக்கு மட்டும், பதில் அளித்தால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலா, ஐந்து கேள்விகள், மாணவர்களின் விருப்பத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.
விடைத்தாளில் தவறான விடையை தேர்வு செய்தால், மைனஸ் மதிப்பெண்ணாக, ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். பதில் அளிக்காவிட்டால், அதற்கு, நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது என, முந்தைய நடைமுறையே தொடரும் என்றும், விதிகளில் கூறப்பட்டுள்ளது.
மலையாளம், பஞ்சாபி சேர்ப்பு!
நீட் தேர்வு, தமிழ், ஹிந்தி, உருது, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா மற்றும் பஞ்சாபி என மொத்தம், 13 மொழிகளில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு வரை, 11 மொழிகளில் மட்டுமே தேர்வு நடந்தது. இம்முறை மலையாளமும், பஞ்சாபியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம், ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில், எதை தேர்வு செய்தாலும், அனைத்து மாநிலங்களிலும் அந்த மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படும். பட்டியலில் உள்ள மற்ற மொழிகளை தேர்வு செய்தால், அந்தந்த மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். மாநில மொழியை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, ஆங்கிலமும், அவர்கள் தேர்வு செய்த மாநில மொழியும் இணைந்த வினாத்தாள் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை