'பெட்ரோலும் வேண்டாம், கரண்டும் வேண்டாம்' - மதுரை கல்லூரி மாணவர் உருவாக்கிய சோலார் சைக்கிள்!
வாகன எரிபொருள் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், மதுரை அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் மாணவர் தனுஷ் உருவாக்கியுள்ள சோலார் சைக்கிள் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்று வருகிறது.
மதுரை மேலூர் தாலுகா கோட்டநத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கட்டிட கூலித் தொழிலாளியின் மூன்றாவது மகன் தனுஷ் குமார். அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் இளநிலை மூன்றாம் ஆண்டு முடித்துள்ளார்.
இவர், 12 வாட் திறன் கொண்ட இரண்டு சூரிய ஒளி தகடுகள், 26 ஆம்ப்ஸ் திறன் கொண்ட இரண்டு பேட்டரிகள், 350 வாட்ஸ் திறன் கொண்ட மோட்டார் ஆகியவை கொண்டு சுமார் 25,000 ரூபாய் செலவில் சூரிய ஒளியில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார்.
சூரிய வெளிச்சம் இருக்கும் வரை தினமும் 12 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்; சூரிய வெளிச்சம் கிடைக்காத பட்சத்தில் கரன்ட் மூலமும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்து விட்டால் 30 கிமீ வேகத்தில், 30 கிமீ தூரம் வரைக்கும் பயணம் செய்து கொள்ளலாம். சார்ஜ் தீர்ந்து விட்டால் சைக்கிளாக பயன்படுத்தி பெடல் செய்து இயக்கிக் கொள்ளலாம்.
தனது கண்டுபிடிப்பு குறித்து இயற்பியல் மாணவர் தனுஷ் குமார் பேசுகையில், "அடிப்படையிலேயே எனக்கு இயற்பியல் மீது பெரும் ஆர்வம் உள்ளது. அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்த உடன், எனது இயற்பியல் பேராசிரியர் மூர்த்தி இயர்பியலை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுற்று சூழல் மாசு உள்ளிட்டவை குறித்து அவர் ஏற்படுத்திய கவனம் என்னை இந்த உருவாக்கத்திற்கு உந்தி தள்ளியது' என்று கூறினார்.
மேலும், கல்லூரி இரண்டாம் ஆண்டில் இந்த முயற்சியை துவங்கும் போது தனது வீட்டில் எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்றும் 'எதற்கு பணத்தை வீணாக்குகிறாய்?' என்றும் கேட்டார்கள் என கூறும் தனுஷ், தற்போது தனது கண்டுபிடிப்பின் அருமை தெரிவிந்து குடும்பத்தினர் பாராட்டுவதாக தெரிவித்தார்.
தனது கண்டுபிடிப்பை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்ப்பதற்கு சில தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுவதாகவும் அது கிடைத்து விட்டால் இன்னும் குறைந்த விலையில், அடக்கமாக, அழகான வடிவில் இத்தகைய சோலார் சைக்கிளை தயாரிக்க முடியும் என்றும் தனுஷ் கூறினார்.
அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பேசுகையில், 'கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் கற்ற கல்வியை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் இந்த சைக்கிளை மாணவர் தனுஷ் கண்டு பிடித்து உள்ளார். இது அனைத்து மாணவர்களுக்கும் முன் உதாரணம்.
இப்போது இந்த சைக்கிள்களை கல்லூரி வளாகத்திற்குள் பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் வளாகத்தின் பசுமையும் காப்பாற்றப்படுகிறது, வாகன தேவையும் பூர்த்தியாகிறது.
அடுத்தகட்டமாக, இந்த உருவாக்கத்திற்கு காப்புரிமை பெற்று இதை அமெரிக்கன் கல்லூரி மூலமே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். இவருடைய முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக முதுநிலை இயற்பியல் படிப்பை இங்கேயே இலவசமாக தொடர்வதற்கும் அனுமதி வழங்கி உள்ளோம்" என கூறினார்.
எரிபொருள் உயர்வு மற்றும் வாகன பெருக்கம் காரணமாக இந்த சோலார் சைக்கிள் காலத்தின் தேவையாகவும் மாறியிருக்கும் நிலையில், வெளிநாடுகளை போல இங்கும் சோலார் சைக்கிள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தனுஷ் குமாரை போலவே வாகன ஓட்டிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சோலார் சைக்கிளை தொடர்ந்து, உடன் பயிலும் இயற்பியல் மாணவி மாளவிகா உடன் இணைந்து மேலும் சில கண்டுபிடிப்புகளையும் தனுஷ் குமார் மேற்கொண்டுள்ளார். வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர் மூலம் பல்பை எரிய வைக்கும் முயற்சியும், காற்றின் மூலம் மொபைல் போனை சார்ஜ் செய்யும் கருவியும் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் அவை அறிமுகம் செய்யப்படும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை