பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்..! கவனத்தில் கொள்ள வேண்டியவை? :கல்வியாளர்கள் அறிவுறுத்தல்
பொறியியல் படிப்பில் விருப்பம் உள்ள மாணவர்கள் தாங்கள் சேர உள்ள கல்லூரி மற்றும் படிப்பை தேர்வு செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை என்பது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு....
12ஆம் வகுப்பை முடித்து மதிப்பெண்களுக்காக காத்திருக்கும் மாணவர்கள் இப்போதே தாங்கள் எந்த மாதிரியான படிப்பில் சேர இருக்கிறோம் என்பதை முடிவு செய்து இருப்பார்கள். முதலில் ஏன் பொறியியல் படிப்பை தேர்வு செய்ய போகிறோம் என்பதில் மாணவர்கள் தீர்க்கமாக இருக்க வேண்டும். பிறகு அதில் எந்த பாடப்பிரிவு நமக்கு உகந்ததாக இருக்கும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.
பொறியியலை பொருத்தவரையில் அனைத்து படைப்புகளுமே சிறப்பான படிப்புகள் தான் ஆனால் நம்முடைய ஆர்வத்திற்கு ஏற்றபடி பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்வு செய்வதற்கு முன் அந்த கல்லூரி தேசிய தர நிர்ணயம் செய்யப்பட்ட கல்லூரியா, அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் எந்த இடத்தில் உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கல்லூரியின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் பார்த்து அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு கல்லூரியை தேர்வு செய்யும் முன் குறைந்தது ஒரு முறையாவது அக்கல்லூரிக்கு நேரில் சென்று நூலகம், ஆய்வகம் போன்றவற்றை சுற்றிப்பார்த்து உரிய வசதிகள் உள்ளதா என விவரங்களை கேட்டு அறிந்து கொள்வது நல்லது. மிக முக்கியமாக அக்கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் அல்லது முன்னாள் மாணவர்களுடன் பேசி கருத்துக்களை கேட்டறிவதும் முக்கியமானது.
நம்முடைய நண்பரோ, உறவினரோ ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்தார், தேர்வு செய்ய சொன்னார் என்பதற்காகவே அந்த பாடப்பிரிவை கண்மூடித்தனமாக தேர்வு செய்யக்கூடாது என்பதே கல்வியாளர்களின் அறிவுறுத்தல்.
மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள துறை, அந்தத் துறைக்கான வேலைவாய்ப்புகள் பற்றியெல்லாம் நன்கு ஆலோசித்த பின்னர்தான் ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு இன்னும் குறைந்தது இரண்டு மாத காலம் இடைவெளி இருப்பதால் இந்த காலத்தை பயன்படுத்தி தரவுகளைத் திரட்டி சிறந்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை