பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்கள் இலவச பயணம் மேற்கொள்ள பயணச்சீட்டு வழங்க முடிவு
தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய ஆட்சி நடைமுறைக்கு வந்த பிறகு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த வகையில் சாதாரண கட்டணமுள்ள நகர பேருந்துகளில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் படி, ஜூலை 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையேயான பேருந்து சேவைகள் துவங்கியுள்ளன. இதை தொடர்ந்து தமிழக முதல்வர் அறிவிப்பின் படி, இலவச பயணத்துக்கான சிறப்பு பயணச்சீட்டுகள் போக்குவரத்து கழகத்தால் அச்சிடப்பட்டு அவை ஒப்படைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ள அந்த பயணசீட்டுகளில் திருநங்கைகளுக்கான திந என்ற எழுத்துக்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான மா எனவும், மாற்றுத்திறனாளி உதவியாளரை குறிக்கும் வகையில் மாஉ எனவும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த பயணச்சீட்டுகள் மாற்றத்தக்கதல்ல எனவும் பரிசோதனைக்கு உட்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இந்த சீட்டுகள் இன்று (ஜூலை 7) முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘அரசு பேருந்துகளில் ஒரு நாளைக்கு பெண்கள் மாற்றுத் திறனாளிகள் என பலர் பயணம் செய்து வருகின்றனர். இவற்றில் தினசரி எவ்வளவு பேர் பயணம் செய்து வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இந்த கட்டணமில்லா பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி ஒவ்வொரு கோட்டத்திலும் உள்ள சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனரிடம் அந்த சீட்டுகளை வழங்கி உள்ளோம்’ என தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை