கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தார், குடும்பத்திற்கு 10 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு
இளம் கால்பந்து வீராங்கனை பிரியா ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 8ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அழைத்து பிரியா வரப்பட்டார். நவம்பர் 9ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு இரத்த ஓட்டம் பாதித்ததால் ரத்த நாளங்கள் பழுதாகி உள்ளது. மேல் சிகிச்சைக்காக பத்தாம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டார். நேற்று முன்தினம் நேரடியாக வந்து பார்த்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் எலும்பு சிகிச்சை நிபுணர் மூட்டு நிபுணர், மயக்கவியல் மருத்துவர் உள்ளிட்டவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சை இருந்த போதும் இன்று காலை மாணவி பிரியா உயிரிழந்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மேலும் துறை ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்படும். மருத்துவர் குழு விசாரணையும் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை