தமிழக அரசு சார்பில் உயர் கல்வி உதவித்தொகை! யார் யாருக்கு கிடைக்கும்? நீங்கள் விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை : பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், தகுதியுள்ள மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
உயர்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு, அரசு உதவிப்பெறும் கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்பட்ட வகுப்பினர், மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட துவங்கும், புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 6.12.2022க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதேபோல் புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.1.2023க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமப்பிக்கப்படவேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை அணுக வேண்டும். மேலும், அரசு இணையதளம் www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm scholarship.schemes ல் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை