Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

குழு ஆய்வால் குழம்ப வேண்டாம்,குதுகலத்துடன் எதிர்கொள்வோம்

 *குழு ஆய்வால் குழம்ப வேண்டாம்*

*குதுகலத்துடன் எதிர்கொள்வோம்*


தமிழ்நாட்டில் கல்வித்துறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான பதட்டத்துடன் பயணிப்பதும், அடிப்படை வசதிகள் இல்லாத கிராமப்புற பள்ளிகளில் ஆன்லைனில் புள்ளி விபரம் கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது.


பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது* என்ற வைரமுத்து கவிதை கச்சிதமாக பொருந்தி போகிறது. 


2019 ஜனவரி ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் நம்மை கொச்சைப்படுத்திய, பொதுமக்கள் மத்தியில் அந்நியப்படுத்திய முந்தைய அரசின் தவறான நடவடிக்கை நம்மை வீறுகொண்டு எழச்செய்தது. இன்றைய முதல்வரின் அன்றைய ஆறுதல் நமக்கு பட்டு வேட்டி கனவை உருவாக்கியது. ஆனால் இன்றைய நிலை ஆசிரியர்களின் மன அழுத்தம் அதிகரித்து நோயாளியாக மாறக் கூடிய அளவிற்கு மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பது கல்வி நிலையங்களில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதில் நமக்கு இருவேறு கருத்துகள் இல்லை. ஆய்வுகளை வரவேற்கும் அதேவேளை அந்த ஆய்வு அச்சப்படும் அளவிற்கு அதீதப்படுத்துவதை ஏற்க முடியாது.


ஆய்வுகள் ஆலோசனை வழங்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக இருந்தால் கல்வி துறையின் வளர்ச்சிக்கு உதவும். அதைவிடுத்து ஆய்விற்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஒன்றியங்களை கூட முன் இரவில்தான் அறிவிப்போம் என்பதும், கடுமையான இரகசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் இந்திய இராணுவம் பாக்கிஸ்தான் போரில் கூட பயன்படுத்தாத உத்தியாக உள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் மீது அதிகாரிகளின் அளவீடு என்ன என்பது புரிகிறது.


இயந்திரங்களுடன் உரையாடும் துறையா நாம். இதயங்களுடன் உறவாடும் துறை என்பதை அதிகார வர்க்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை உளவியல் ரீதியாக அணுகி அவர்களை வார்த்தெடுக்கும் மகத்தான பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களின் பணிச்சூழல் பதட்டம் அடையாமல் இருக்க வேண்டும்.


 மற்றவர்களிடம் கையூட்டு பெறாமல் தனது ஊதியத்தில் தன்னால் இயன்ற உதவிகளை தங்களிடம் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்ச்சி அடையும் எண்ணற்ற நல்ல உள்ளங்களை இங்கு மட்டுமே பார்க்க முடியும்.அப்படி கருணை உள்ளம் கொண்ட ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் எண்ணற்ற உத்தரவுகளை வெளியிட்டு ஒருவித பரபரப்பான சூழ்நிலையில் வைப்பது மாணவர்களின் கல்வியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவல்ல நாங்கள் விரும்பிய மாற்றம்.


ஆசிரியர்களை மனநோயாளிகளாக மாற்றுவதில் அதிகாரிகள் அவசரம் காட்டி வருவது கல்வித்துறையின் வளர்ச்சியை கீழ் நோக்கி இழுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருடர்களைப் பிடிக்க பொறி வைக்கும் காவல்துறை போல் கல்வி துறை செயல்படுவது அதன் அடிப்படை நோக்கத்தையே சிதைத்து விடும்.


தேவையற்ற பதிவேடுகள் அகற்றப்பட்டு விட்டன என அறிவிப்பு விடும் அதே கல்வித்துறை தான் அடுத்தடுத்த பள்ளி பார்வையில் நீண்ட பட்டியலை வெளியிடுகிறது. பதட்டத்துடனே பள்ளியில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என நினைப்பதுதான் திராவிட மாடல் அரசாங்கமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். 


அடிப்படை வசதிகள் என்ன வேண்டும்? இடிக்க வேண்டிய கட்டிடம் ஏதும் உண்டா? என ஆயிரமாயிரம் கேள்விகள் ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது? தீர்வுதான் கண்ணுக்கு புலப்படாத சிந்துபாத் கதையாக தொடர்கிறது.


புதுப்புது பெயரில் குழு ஆய்வுகள் குழப்பத்தை ஏற்படுத்துமே ஒழிய புதுமையை ஏற்படுத்தாது. ஆய்வு செய்து அறிவுரை வழங்கினால் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி இருக்கும். அதிகாரம் உள்ளது என்பதால் அதிர்ச்சி கொடுப்பதில் என்ன பயன் ஏற்படும்?. களச்சூழலை கருத்தில் கொள்ளாமல், மாணவர்களின் புறச்சூழல் புரியாமல் மாற்றம் எப்படி ஏற்படும்? குழந்தை மையக்கல்வி கொடுமையான கல்வியாக மாறலாமா? அதிகாரிகள் உணர்வார்களா?


நம் முன்னே ஆயிரமாயிரம் கேள்விகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. சவால்களை எதிர் கொண்டு வெற்றி பெறும் வழிகள் அறிந்து அறிவூட்டும் ஆசிரியர்கள் நாம்.

 

மண்டல ஆய்வு, மாவட்ட ஆய்வு, வட்டார ஆய்வு என்று பெயர்கள் மாறுபடலாம். விளைவுகள் நம்மால் மட்டுமே ஏற்படுத்த முடியும். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளை நம் குழந்தைகளுக்கு மேலாக வார்த்தெடுக்கும் பணியினை இடைவிடாது மேற்கொள்வோம்*


பாடப்புத்தகங்களும், பயன்படாத பதிவேடுகளும் மட்டுமே கல்வி என நினைப்பது அதிகாரிகளின் எண்ண ஓட்டம். அனைத்து மாணவர்களுக்கும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்து அவனை ஒரு சிறந்த சமூக நலம் பேணும் குடிமகனாக வார்த்தெடுக்க நினைப்பது ஒவ்வொரு ஆசிரியர்களின் கனவு

 நாம் நம் கனவுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதிர்கால இந்தியாவை ஆளப்போகும் மிகப்பெரிய தலைவர்கள் நம் வகுப்பறையில் உள்ளனர். அவர்களுக்கு ஆசானாக இருப்பது மிகப்பெரிய வரம். அதனால் ஆய்வுகளை கண்டு குழப்பம் அடையாமல் தெளிவான சிந்தனையுடன் வகுப்பறை நோக்கி செல்வோம்.


நம்மை சுற்றி சூழ்ந்து இருக்கும் பிரச்சினைகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது களப்போராட்ங்களின் மூலம் மாநில மையம் வழிகாட்டுதல் பெற்று தொடர்ந்து மேற்கொள்ளும்.


ஆய்வுகள் நம்மை புத்துணர்ச்சி ஏற்படுத்தும் அளவுகோலாக மாற்றுவோம். அச்சப்படும் அளவிற்கு மனஉளைச்சலுக்கு ஆளாகி அவதியுறும் நிலையில் இருந்து வெளிவருவோம்.


வட்டார, மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களின் கோப்புகள் தீர்வு காணப்படாமல் ஆண்டு கணக்கில் முடங்கி உள்ளதற்கும், முக்கியமான பேப்பரை எதிர்பார்த்து முடக்கப்பட்டுள்ளதற்கும் குழு ஆய்வு எப்போது? என் வினா கொடுப்போம். விரைவில் அதற்கான தீர்வுகளை நோக்கி இயக்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.


தோழமையுடன்

ஆ.முத்துப்பாண்டியன்

மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

சிவகங்கை மாவட்டம்

குழு ஆய்வால் குழம்ப வேண்டாம்,குதுகலத்துடன் எதிர்கொள்வோம் குழு ஆய்வால் குழம்ப வேண்டாம்,குதுகலத்துடன் எதிர்கொள்வோம் Reviewed by Rajarajan on 21.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை