இறுதி செமஸ்டர் தேர்வு, தயாராகுமாறு பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த முழுவீச்சில் தயாராகுமாறு பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-2020-ம் ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 15-ம் தேதிக்குப் பின்னர் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. இறுதி செமஸ்டர் தேர்வை மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வாகவும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வாகவும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Was
அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவரின் இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம், தனிமைப்படுத்தல் முகாம்கள், கட்டிடங்களின் வசதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து உடனடியாக ஒப்படைக்குமாறு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மாணவரின் இருப்பிடத்துக்கு அருகிலேயே தேர்வு மையம் ஒதுக்கவும், ஒரு அறையில் 12 மாணவர்களை மட்டும் வைத்து தேர்வை நடத்தவும் ஏற்பாடு நடைபெற்று வருவதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வுக்கான அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளதாகவும் உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை