ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றக்கோரி ஏப்ரல் 9ம் தேதி சென்னை,கிருஷ்ணகிரி,நாமக்கல்,தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலத் தலைவர் ஆ.ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: குமரப் பருவ மாணவர்களின் நடத்தையில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள், ஒழுக்க சீர்கேடுகள் காரணமாக பள்ளிகளில் அசம்பாவிதங்கள் நடப்பதும் அதற்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பொறுப்பாளிகளாக்கப்பட்டு அவர்கள் மாணவர்களாலும் சமூக விரோதிகளாலும் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. இவ்வாறான செயல்களினால் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் மனவேதனையோடும், மன உளைச்சலோடும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களை நெறிப்படுத்தவும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், மருத்துவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் உள்ளது போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
பல பள்ளிகளில் அடிப்படை பணியாளர்கள்,அமைச்சுப் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் பள்ளி வளாகத்தை,கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பதில் பல்வேறு இன்னல்களை சந்திப்பதுடன் அலுவலகப் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவதால் கற்றல் கற்பித்தல் பணி பெருமளவில் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே உடனடியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அமைச்சுப் பணியாளர்களையும்,அடிப்படை பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.
தேர்வு நெருங்கி வரும் நேரத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டதால் பல பள்ளிகளில் முதுகலையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாணவர்கள் நலன் கருதி உடனடியாக காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தொகுப்பூதியத்தில் நியமித்து ஊதியம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் பதவி உயர்வு இல்லாத பணித் தொகுதியாக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணித் தொகுதி உள்ளது. எனவே மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு பதவி உயர்வு வழங்க பணிவிதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.
மேல்நிலை வகுப்புகளில் கணினி பிரிவுகளில் பயிலும் ஏழை மாணவர்களிடம் ரூ.200 கணினி கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களின் நலன் கருதி இதை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திட ஏப்ரல் 9ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை, கிருஷ்ணகிரி, நாமக்கல், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் மண்டல அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை