செப்டம்பர் 1 ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. கல்வி நிலையங்கள் வாயிலாக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடைவடிக்கையாக அவை மூடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பள்ளிகளை மீண்டும் திறப்பு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுழற்சி முறையில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறினார். அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அதில் கூடுதலாக சேர்க்க வேண்டிய விதிமுறைகள் மட்டும் மருத்துவ வல்லுனர்களின் பரிந்துரையில் பேரில் இணைக்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்கள் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும், கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் குறித்து தெரியவந்தால் அவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்படும்.
அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை