அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ஆகக் குறைக்க கூடாது எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்கள்
`ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு பாண்டு பத்திரங்களா?' - எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்கள்
ஓய்வுபெறும் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை, இனி பாண்டு பத்திரங்களாக வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகவே, தமிழக அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், ஓய்வு பெறும் வயதைக் குறைக்கக் கூடாது எனவும் கோரிக்கை எழுப்புகிறார்கள்.
கொரோனா நிதி வழங்கிய ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி திருவாரூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளருமான ரங்கராஜன், ``மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ஆகக் குறைக்க உள்ளதாகவும், அவ்வாறு ஓய்வு பெறுபவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப் பலன்களை பாண்டு பத்திரங்களாக வழங்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
தமிழக முதலமைச்சர், இதற்கு உடன்பட மாட்டார் என நம்புகிறோம். ஆனாலும் கூட, இதுபோன்ற திட்டங்கள் அதிகாரிகளால் முன்மொழியப்பட்டால், அதை ஏற்க வேண்டாம் எனத் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 மற்றும் 60 வயதுக்கு மேல் என்றுதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58-ஆகக் குறைக்கப்பட்டால், அதிக வயதில் வேலைக்கு வந்தவர்கள், இந்தத் திட்டத்தால் குறைந்த பணிக்காலத்திலேயே ஓய்வுபெற்று மிகவும் பாதிப்படைவார்கள். இவர்களது குடும்பங்கள் வருமானத்தை இழக்கும்.
மேலும், குறிப்பட்ட பணிக் காலத்தை நிறைவு செய்தால்தான் பென்ஷன் வழங்கப்படும் என்பது விதிமுறை. 60 வயது அல்லது 33 ஆண்டுகள் பணி முடித்தல், இதில் எது முதலில் வருகிறதோ, அதன் அடிப்படையில் பணி ஓய்வு வழங்க வேண்டும்.
பணப் பலன்களை பாண்டு பத்திரங்களாக வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பாண்டு பத்திரங்கள் முதிர்ச்சி அடைந்து கையில் பணம் கிடைக்க, சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதை ஏற்க முடியாது. பணி ஓய்வின்போது கிடைக்கும் பணத்தைக் கொண்டு, பிள்ளைகளின் திருமணம், வீடு கட்டுதல் போன்றவற்றைச் செய்யலாம் என எதிர்பார்ப்பில் இருக்கும் அரசு ஊழியர்களை இந்தத் திட்டம் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கும். குடும்பத்தினர் மத்தியிலும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்.
தமிழக அரசு, பணப் பலன்களை, ரொக்கமாக வழங்குவதைக் கைவிடக் கூடாது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு, அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் கிடையாது என அப்போதைய அ.தி.மு.க அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. இது புதிதாகப் பணிக்குச் சேரும் அரசு ஊழியர்களைப் பாதிக்கக் கூடியது. எனவே, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக முதல்வரிடம் வலியுறுத்துகிறோம்’’ என்றார்.
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாண்டு பத்திரங்கள் வழங்க அரசு முடிவெடுத்தால், பிற்பாடு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இதே மாதிரி வழங்கப்படும் நிலை உருவாகும் என அரசு ஊழியர்கள் அனைவரும் பயந்து போயிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் மனதில் மீண்டும் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும்!
கருத்துகள் இல்லை