தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு? விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலைத்தொற்று பாதிப்பு குறைந்துள்ள சூழலில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டுமாக திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவான கொரோனா தாக்கத்தினால் மூடப்பட்ட பள்ளிகள் ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பிறகு டிசம்பர் மாதத்தில் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதனிடையே ஏற்பட்ட கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் செயல்பட்டு வந்த பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதை தொடர்ந்து தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பானது வெகுவாக குறைந்துள்ளதால், பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திர பிரதேசத்திலும் உயர்கல்வி மாணவர்களுக்காக மட்டும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் துவங்குவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது. அதாவது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான ஆலோசனையின் போது, செப்டம்பர் முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பாக அரசு சிந்தித்தது.
இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த முடிவு, இன்னும் ஒரு சில நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும், தினசரி 50% மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை