தமிழக அரசிற்கும் ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்குமான நல்லுறவினைப் பேண ஜாக்டோ ஜியோ கோரிக்கை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை நேரில் அழைத்துப் பேசி , தமிழக அரசிற்கும் ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்குமான நல்லுறவினைப் பேண வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழக அரசுப் பொறுப்பேற்றுக் கொண்டு , முதல் நிதிநிலை அறிக்கையின் கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறது.
ஒன்றிய அரசு அறிவித்த 11 விழுக்காடு அகவிலைப்படியினை நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் , கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அரசின் தொற்று நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி , தமிழக மக்களை கொரோனா கோரப் பிடியில் இருந்து காக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இறந்த நிலையிலும் , தங்களின் உயிரினை துச்சமென மதித்து , களப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 1-4-2022 முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தையும் பேரதிர்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது.
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் நேற்றைய தினம் ( 23-08-2021 ) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் , ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் மிகவும் துச்சமென மதித்ததோடு மட்டுமல்லாமல் , பொதுமக்களிடம் அன்னியப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும் , நிதிநிதி அறிக்கையில் , ஒரு ரூபாயில் 19 பைசா ஊதியத்திற்காகவும் 8 பைசா ஓய்வூதியத்திற்காவும் செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு , தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு ரூபாயில் 65 பைசா ஊதியம் - ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்று முன்னுக்குப்பின் முரணாகத் தெரிவித்து பொதுமக்களிடத்தில் ஆசிரியர்கள்- - அரசு ஊழியர்களின்பால் ஒரு பகைமை உணர்வை வளர்க்கும் தவறான புள்ளிவிவரத்தினைப் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 2002 ஆம் ஆண்டு , தமிழகத்தின் வருவாயில் 94 விழுக்காடு ஊதியம் - ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்ற கருத்தைத் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் , ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் பல்வேறு சலுகைகளை இரத்து செய்து , ஓய்வூதியப் பணப்பலன்களை ரொக்கமாக வழங்காமல் பணப்பத்திரமாகத் தந்தார். அன்றைய தினம் , தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் 94 விழுக்காடு ஊதியம் - ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்பதனை புள்ளிவிவரத்தோடு மறுத்தது மட்டுமல்லாது , ஆளுகின்ற அரசு தனது கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கும் வழங்கும் ஊதியம் - ஓய்வூதியத்தினை சுமையாகக் கருதக்கூடாது , அரசின் திட்டச் செலவினமாகவேக் கருத வேண்டும் என்ற கருத்தினைத் தெரிவித்தார்.
உரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்த்து , ஜாக்டோ ஜியோ கிளர்ந்தெழுந்து டெஸ்டா எஸ்மா சட்டங்களை எதிர்கொண்டு போராடியபோது , 1,74,000 பேர் ஒரே ஆணையில் பணிநீக்கம் செய்யப்பட்டு , ஆயிரக்கணக்கானோர் சிறைவைக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கியதற்காக , முன்னான் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மீதும் எஸ்மா - டெஸ்மா வழக்குப் போடப்பட்டது என்பது வரலாறு. முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆசிரியர் - அரசு ஊழியர் விரோதப் போக்கினை கையாண்டதால் , ஜாக்டோ ஜியோ 2004 ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் “ பகைமுடிக்கும் பணி முடிப்போம் ” என்ற சூளுரையோடு தேர்தல் பணியினை மேற்கொண்டது. தமிழகம் - புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
2006 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 2006 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் , முந்தைய ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் உரிமைகளையும் திரும்ப வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் , டாக்டர் கலைஞர் 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த நேரத்தில் , 2008 ஆம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தபோது , தொலைக்காட்சி வாயிலாக ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்ததைக் கண்டவுடன் , உடனடியாக அதிகாரிகளை அழைத்து , தமிழக அரசு ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிக்கான உத்தரவினை மருத்துவமனையில் இருந்து கொண்டே பிறப்பித்தார்கள் என்ற வரலாற்றினை மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் தன்னுடைய பேட்டியில் , கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தங்களது பணியினை மேற்கொண்ட அரசு ஊழியர்களை “ ஒருநாள் கூட சம்பளத்தை / ஓய்வூதியத்தினை இழக்காமல் " என்று வசைபாடியது என்பது , கொரோனா நோய்த் தொற்றினை எதிர்கொள்வதற்காக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ .150 கோடியினை இரண்டு முறை வழங்கியதை மறந்துவிட்டு , ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின்மீது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு இருக்கின்ற வன்மத்தை வெளிக்காட்டியுள்ளார். முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது , ஜாக்டோ - ஜியோ கடந்த காலங்களில் நடத்திய அனைத்து போராட்ட - இயக்க நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் வாயிலாகவும் போராட்டக் களத்திற்கு நேரிலே வந்தும் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர்களிலும் ஆதரவினைத் தொடர்ச்சியாக நல்கியதை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
ஒன்றிய அரசு கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி , ஜனவரி 2020 முதல் 18 மாதங்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படியினை நிறுத்தி வைத்தது. முந்தைய அதிமுக ஆட்சியும் ஒன்றிய அரசினைப் பின்பற்றி , ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 18 மாதங்கள் முடக்கி வைத்தபோது , அரசின் முடிவுக்கு எதிராக குரல்கொடுத்து , அகவிலைப்படியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சித் தலைவரும் தற்போதைய மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் அறிக்கை வெளியிட்டதை நினைவு கூறுகிறோம். மேலும் , ஜாக்டோ ஜியோ போராட்ட களத்திற்கு வந்து உறுதியளித்ததற்கு வலுசேர்க்கும் விதமாக , திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் “ திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் ” என்ற வாக்குறுதி இடம் பெற்றது.
இந்த வாக்குறுதியானது ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்று , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படவேண்டும் என்றால் , முத்தமிழ் அறிஞரின் புதல்வர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றால்தான் சாத்தியமாகும் என்பதை அன்றைக்கே உணர்ந்து , கடுமையான களப்பணியாற்றினோம். கடந்த மே ஏழாம் தேதி , தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தருணத்திலிருந்தே , தேர்தலின்போது தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியதைக் கண்டதும் , நமது கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பினை ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களிடம் ஏற்படுத்தியது.
ஆனால் , மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதோடு , மக்கள் மத்தியில் பகைமை உணர்வையும் வெறுப்பு உணர்வையும் வளர்க்கும் பணியினையும் மேற்கொண்டுள்ளார். இப்போக்கானது , அரசிற்கும் ஆசிரியர் - அரசு ஊழியரிடையே , காலங்காலமாக இருந்த நல்லுறவினை பேணிப் பாதுகாத்துவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் பெரும் விரிசலை உருவாக்கும் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கருதுகிறது.
மேலும் , கொரோனாப் பேரிடர் பணிகளை அரசு மேற்கொள்ள ஏதுவாக , கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தாமாக முன்வந்து ஒருநாள் ஊதியத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் , பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் தங்களது உறுப்பினர்களிடமிருந்து நிதியினைத் திரட்டி , மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து , முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
18 மாதங்கள் அகவிலைப்படியினை நிறுத்திவைத்து விட்டு , தற்போது ஒன்றிய அரசு அறிவித்துள்ள 11 விழுக்காடு அகவிலைப்படியினை பல்வேறு மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கும் வழங்கியுள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பிற்கு முழுமையான நம்பிக்கை உள்ளது என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஏனவே , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் , இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் , 11 விழுக்காடு அகவிலைப்படி மற்றும் சரண்விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் அரசுக்கும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கும் இடையே இருந்த நல்லுறவினை மீட்டெடுக்கும் வகையில் , ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.
- மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோ
கருத்துகள் இல்லை