அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு
தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவினை அறிமுகம் செய்ய அனுமதி கோரினார். பின்னர் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தொழிற்கல்வி:
தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்புகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த ஆண்டு மிக குறைவாக இருந்தது. இதனை ஆய்வு செய்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டுக்கான சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் தொடர்பாக முக ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
கிராமப்புற மாணவர்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு கடந்த 2006 ஆம் ஆண்டு, தொழிற்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு 2007, 2008 ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2020-2021 கல்வியாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 0.83 % ஆகும். தொழிற்கல்வி படிப்புகளில் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 3%. இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களோடு போட்டியிட்டு சேர்க்கை பெறுவதில் அரசுப் பள்ளி மாணவர்கள் நிலை மிக பின்தங்கியுள்ளது. குடும்பத்தின் வறுமை, பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை, கல்வியின்மை அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்வி படிப்புகளில் குறைந்துள்ளது. இந்நிலையை மாற்ற தொழிற்கல்வி படிப்புகளில் 10 சதவீதத்திற்கு குறையாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு பிரிவுகளில் 7.5% வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன் வடிவினை அறிமுகம் செய்ய அவைத்தலைவரிடம் அனுமதி கோரினார். பின்னர் இது சட்டமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது .
கருத்துகள் இல்லை